Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/சொல்கிறார்கள்/ உதவி கேட்டு வருவோருக்கு திறந்தே இருக்கும் கதவுகள்!

உதவி கேட்டு வருவோருக்கு திறந்தே இருக்கும் கதவுகள்!

உதவி கேட்டு வருவோருக்கு திறந்தே இருக்கும் கதவுகள்!

உதவி கேட்டு வருவோருக்கு திறந்தே இருக்கும் கதவுகள்!

PUBLISHED ON : ஆக 06, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அமெரிக்கத் தமிழர்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் கல்வி, மருத்துவம், பெண்கள் முன்னேற்றம் என பல தளங்களில் பெரும் பங்காற்றி, 50வது ஆண்டில் இருக்கும், 'தமிழ்நாடு அறக்கட்டளை' நிறுவனர்களில் ஒருவரான, பழனி ஜி.பெரியசாமி: அமெரிக்காவில் 1974ல், 400 இந்தியர்கள் இருந்தாலே அதிகம். தற்போது, 45 லட்சம் பேர் இருக்கின்றனர்.

அன்று மூன்று நண்பர்களுடன் ஆரம்பித்தோம்; ஆனால் இன்று, அமெரிக்காவில் உள்ள எல்லா மாகாணங்களிலும், 'தமிழ்நாடு பவுண்டேஷன்' இருக்கிறது; அதில், 1,500 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அன்று, தமிழகத்தில் இருக்கும் நண்பர்களிடம் கூறி, தேவை இருப்போரை கண்டு பிடித்து உதவிகள் செய்தோம்.

'தமிழகத்தில் வலுவான அமைப்பை கட்டினால் தான் வேலைகளை முறைப்படுத்த முடியும்' என்று உணர்ந்து, பொள்ளாச்சி மகாலிங்கம், வா.செ.குழந்தைசாமி போன்ற நல்ல மனிதர்களை வைத்து, ஒரு நிர்வாக அமைப்பை உருவாக்கினோம்.

அந்த சமயத்தில், தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., சிகிச்சைக்காக அமெரிக்கா வந்த போது, தமிழர்களின் சேமிப்பையும், செயல்பாடுகளையும் கேட்டறிந்து, அவர்களை உற்சாகப்படுத்தியதுடன், கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள நிலத்தை, விலை கொடுத்து வாங்கி, தன் பங்களிப்பாக அறக்கட்டளைக்கு அளித்தார்.

ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள, மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, சிறப்பாசிரியர்கள் நியமித்து அவர்களை மேம்படுத்துகிறோம். மாணவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்த, 'நுாலகம் ஒரு ஆலயம்' என ஒரு திட்டம் வைத்துள்ளோம்.

அமெரிக்காவில் இருக்கும் தமிழர்களின் பிள்ளைகளையும், இங்குள்ள பிள்ளைகளையும் இணைய வழியில் இணைத்து ஆங்கில உச்சரிப்பு, தொழில்நுட்பங்களை கற்றுத் தருகிறோம். 2023 - 24ல் 481 மாணவர்களின் கல்விக்கான முழுப் பொறுப்பை ஏற்றுள்ளோம்.

ஆங்கில உச்சரிப்பை எளிமையாக மேம்படுத்துவதற்கு, அமெரிக்காவில் உள்ள பேசும் பேனாக்களை இங்குள்ள பள்ளிகளுக்கு வாங்கி அனுப்புகிறோம்.

புத்தகத்தில் அந்த பேனாவை வைத்தால், அந்தப் பேனா அந்த பாடத்தின் பெயரை உச்சரிக்கும்; அதற்கு அவ்வளவு பெரிய வரவேற்பு. தற்போது நிறைய பள்ளிகளுக்கு வாங்கி தந்துள்ளோம்.

பெண்களுக்கு தொழிற்பயிற்சிகள், மன வளர்ச்சி குன்றியோருக்கான இல்லங்கள் என, பிற பணிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறோம். இதுபோன்று, 67 திட்டங்கள் எங்களிடம் உள்ளன.

கல்விக்கு வாழும் சூழலோ, பணமோ தடையாக இருக்கக்கூடாது. அதனால், உதவி கேட்டு வருவோருக்கு அன்போடும், கனவோடும் திறந்தே இருக்கிறது... தமிழ்நாடு அறக்கட்டளை கதவுகள்!

தொடர்புக்கு: 044 - 26446319, 98842 -26693.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us