/தினம் தினம்/சொல்கிறார்கள்/ மரங்களில் ஆணி அடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்! மரங்களில் ஆணி அடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
மரங்களில் ஆணி அடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
மரங்களில் ஆணி அடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
மரங்களில் ஆணி அடிப்போர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
PUBLISHED ON : ஜூலை 25, 2024 12:00 AM

விளம்பர பலகைகள் பொருத்துவதற்காக அடிக்கப்படும் ஆணிகளை நீக்கி, மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, ராமநாதபுரம் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும், சுபாஷ் சீனிவாசன்:
போக்குவரத்து காவலர் பணியில் நான் இருந்ததால், சாலைகளில் அதிகமாக சுற்றி வர முடிந்தது. அந்த சமயங்களில் தான் மரங்களை நேசிக்க துவங்கினேன்.
சாலையோர மரங்களில் விளம்பரம் என்ற பெயரில் பலகைகளுக்கென தினமும் மரங்களை ஆணிகளால் துன்புறுத்திக் கொண்டிருந்தனர். இதை கண்கூடாக பார்த்தபோது தான், அவற்றின் வேதனையை என்னால் உணர முடிந்தது.
அப்படி மரங்களை துளைத்தெடுத்த ஆணிகள், சிறிது நாட்களிலேயே துருப்பிடித்து மரத்தை ரணப்படுத்துகின்றன. மேலும், அவை விரைவில் பட்டு போய் விடும்.
எனவே, மரங்களில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை நீக்க ஆரம்பித்தேன். அத்துடன் ஆணிகள் துளைத்து காயம்பட்ட இடத்தில், அரைத்த மஞ்சள் விழுதை வைத்து வைத்தியமும் பார்த்து வருகிறேன்.
இந்த சேவையை, 2017 முதல் செய்து வருகிறேன். அப்போது, தேவகோட்டை பகுதியை சுற்றியிருக்கும் மரங்களை கண்காணித்து, அதில் அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை அகற்ற ஆரம்பித்தேன்.
பணி நேரம் போக, கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், என்னுடைய காரில் ஒரு ஏணி, சுத்தியல் மற்றும் ஆணிகளை நீக்குவதற்கான கருவிகளுடன் புறப்படுவேன்.
சாலையின் இருபுறமும் உள்ள மரங்களில் ஆணிகளை நீக்கும் பணியை தனியொருவனாக செய்வேன். இதுவரை மரங்களில் இருந்து நான் அகற்றிய ஆணிகளின் எடை, ஏறக்குறைய 20 கிலோவுக்கும் கூடுதலாக இருக்கும்.
கரியமில வாயுவை உட்கொண்டு, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான ஆக்சிஜனை தாயுள்ளத்துடன் மரங்கள் தருகின்றன. ஆனால், மனிதர்களோ வியாபார நோக்கில் விளம்பர பலகைகளுக்காக மரங்களில் கண்மூடித்தனமாக ஆணிகளை அறைகின்றனர்.
இப்படி மரங்களை காயப்படுத்துவோர் மீது வழக்கு பதிவு செய்து, கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தால் தான், காலங்கள் கடந்து நிற்கும் பொக்கிஷ மரங்களை பாதுகாக்க முடியும்.
மரங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போது அதை காணும் பொதுமக்கள், பெண்கள், தன்னார்வலர்கள் என்னை பாராட்டுவர். மேலும், ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் வீரராகவ ராவ், என் சேவையை கவுரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கி, ஊக்கப்படுத்தியுள்ளார்.
தொடர்புக்கு:
83000 38265