PUBLISHED ON : மே 21, 2025 12:00 AM

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: அரக்கோணத்தில்,
20 வயது பெண்ணை, தி.மு.க., நிர்வாகி பலருக்கு இரையாக்க நினைத்த சம்பவம்
அதிர்ச்சி அளிக்கிறது. அந்த கொடூரனுக்கு, கடுமையான தண்டனை விரைவில் கிடைக்க
வேண்டும். தி.மு.க.,வில் பதவியில் இருக்கும் பலர், குற்றவாளிகளாக இருப்பது
மக்களுக்கு தெரிய துவங்கி விட்டது. முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டாம்;
கொஞ்சம் நிமிர்ந்து கண்ணை திறந்து, உங்கள் கட்சிக்காரர்களால், மக்கள்
பாதிக்கப்படுவதை தடுக்க முயற்சிக்க வேண்டும்.
பொள்ளாச்சி பாலியல்
சம்பவத்தை வைத்து, அ.தி.மு.க.,வை வசைபாடிட்டு இருந்த ஆளுங்கட்சிக்கு,
அரக்கோணம் சம்பவம் பூமராங்கா திரும்பிடுச்சே!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழக அரசு ஊதியக்குழுவின் தவறான நிர்ணயத்தால், பணியில் இருந்து ஓய்வு பெற, 10 ஆண்டுகள் மீதமிருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஊதிய உயர்வில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களது ஆண்டு ஊதிய உயர்வு பாதிக்காத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஆசிரியர்கள், தி.மு.க.,வின் முக்கியமான ஓட்டு வங்கியாச்சே... கண்டிப்பா, அவங்க பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: வக்ப் சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்துவிட்டு, அதை ஆதரிக்கும் பா.ஜ., உடன் அ.தி.மு.க., கூட்டணி வைத்துள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டி உள்ளார். இதன் வாயிலாக, கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பதை, அ.தி.மு.க., உறுதி செய்துள்ளது.
ஆனா, கடந்த முறை பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருந்தப்ப, மூன்று வேளாண் திருத்த சட்டங்களை விழுந்து விழுந்து ஆதரித்தது ஏன்?
தமிழ்நாடு காங்., விவசாய பிரிவு பொதுச்செயலர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை: கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தின், 39 தொகுதிகளிலும் தி.மு.க., தலைமையிலான, 'இண்டியா' கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றதில் முக்கிய பங்கு வகித்தவர் துணை முதல்வர் உதயநிதி. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வெற்றியிலும், தமிழகத்தின் ஒட்டுமொத்த இளைஞர்களின் மாபெரும் சக்தியாக உதயநிதி செயல்படுவார். எனவே, அவருக்கு தி.மு.க., பொதுச்செயலர் என்ற உயரிய பொறுப்பு வழங்க வேண்டும்.
இப்படி ஓவரா ஜால்ரா தட்டுறாரே... உதயநிதியிடம் ஏதாவது சிபாரிசுக்கு போகும் திட்டம் இருக்குமோ?