PUBLISHED ON : மே 14, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: மாநில சுயாட்சி
என்பது அரசியல். அரசியல் செய்வதற்கு, கட்சிகள் இருக்கின்றன. அதை விடுத்து,
பல்கலைகளையும், கல்லுாரிகளையும், பேராசிரியர்களையும், மாணவர்களையும், சுய
விளம்பரத்துக்காக பயன்படுத்துவது என்பது தவறான முன்னுதாரணம். இந்த
நேரத்தில், முன்னாள் கல்வி அமைச்சர் பேராசிரியர் அன்பழகன், 'கல்வியில்
அரசியலை புகுத்தக்கூடாது' என, சட்டசபையில் முன்பு பேசியதை, தி.மு.க.,
ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்வது நல்லது.
முன்னாள் முதல்வர்
கருணாநிதி வலியுறுத்திய 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டத்தையே
ஏத்துக்காதவங்க, அன்பழகன் கருத்தை மட்டும் ஏத்துக்குவாங்களா என்ன?
நடிகரும், தயாரிப்பாளருமான எஸ்.வி.சேகர் பேட்டி: திரைப்பட தொழிலாளர் சம்மேளனமான, 'பெப்சி' தலைவர் ஆர்.கே.செல்வமணி நியாயப்படுத்த முடியாத விஷயங்களுக்கு அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து, எங்கள் மீது அவதுாறு குற்றச்சாட்டு தெரிவிக்கிறார். செல்வமணி, பெப்சி தலைவரானதே தவறு. படப்பிடிப்பு நடத்த மாட்டேன் என செல்வமணி சொல்வதற்காக, ஒரு அமைப்பு நடத்த வேண்டுமா? 'படப்பிடிப்பு நடத்திக் காட்டுகிறேன்; வேலை செய்கிறேன்; இரண்டு நாட்கள் கழித்து பணம் கொடு' என சொல்பவர் தான் உண்மையான தொழிலாளி.
போராட்டம்னு ஒன்றை நடத்தி னால் தான், சங்கம்னு ஒன்று இருப்பதே மத்தவங்களுக்கு தெரியும்னு செல்வமணி நினைக்கிறாரோ?
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: செவிலியர்கள் கற்ற கல்வியால், அறிவால், அனுபவத்தால், மனித நேயத்தால் சமுதாயத்தில் ஓர் உயர்ந்த இடத்தில் இருக்கின்றனர். மொத்தத்தில் செவிலியர்கள் வசதி படைத்தவர்களுக்கும், வறியவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் செய்யும் சேவையும், தொண்டும் மதிக்கத்தக்கது; வணங்கத்தக்கது. எனவே, மத்திய - மாநில அரசுகள் செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஒட்டுமொத்த செவிலியர்கள் ஓட்டுகளையும் த.மா.கா.,வுக்கு வளைக்க பார்க்கிறாரோ?
அ.தி.மு.க.,வில் இருந்து விலகிய மருது அழகுராஜ் அறிக்கை: நியாயமற்றவனின் கையில் உள்ள நேர்த்தியான ஆயுதமும் குறி தப்பும். நெறி கொண்டவனின் கையில் உள்ள சாதாரண ஆயுதமும், கச்சிதமும் இலக்கை தகர்க்கும். போரின் வெற்றியை முதலில் தீர்மானிப்பது தர்மம். அது என்றும் பாரதத்தின் பக்கமே.
உங்க முன்னாள் தலைவி ஜெ., அடிக்கடி கூறும், 'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மமே மீண்டும் வெல்லும்' என்பது சமீபத்தில் நடந்த போருக்கு நல்ல உதாரணம்!