PUBLISHED ON : ஜன 12, 2024 12:00 AM

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: கடந்த ஒரு லட்சம் ஆண்டுகளில்
இல்லாத வெப்ப நிலை 2023ல் பதிவாகியுள்ளது. வெப்ப நிலை அதிகரிப்பதை குறைக்க,
பெட்ரோல், டீசல், நிலக்கரி, எரிவாயு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்; பொதுப்
போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும்; சூரியசக்தி, காற்றாலை மின் உற்பத்தியை
அதிகரிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. எதிர்கால தலைமுறையைப் பாதுகாக்க,
அனல் மின் நிலையங்கள், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல்
திட்டங்களை கைவிட்டு, இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும்.
கண்டிப்பாக... மில்லியன் கோடி, டிரில்லியன் கோடி பொருளாதாரம் என்றெல்லாம் பேசுவோர், இது குறித்தும் யோசிக்க வேண்டும்!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் நியாயமற்றவை என, யாராலும் ஒதுக்கிவிட முடியாது. முதல்வர் நேரடியாக தலையிட்டு, போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும்.'வேலை நிறுத்தத்துக்கு இடைவேளைதான் விட்டிருக் கோம்... சுபம் போடலை'ன்னு முதல்வருக்கு சுட்டிக்காட்டுறாரோ?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: 'ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்' என்ற தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட, புரிந்துணர்வு ஒப்பந்தம் வழியே ஏற்பட உள்ள வேலை வாய்ப்புகளில், தமிழக இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது தொடர்பாக, எந்த அறிவிப்பையும் முதல்வர் வெளியிடாமல் இருப்பது, தமிழக இளைஞர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
முதல்ல, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்வடிவத்துக்கு வருமான்னு பாருங்க... அப்புறமா, வேலை வாய்ப்பை பத்தி பேசலாம்!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: 'போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், அரசியல் உள்நோக்கம் கொண்டது' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விமர்சித்திருப்பது, தொழிலாளர்களின் மனதை துன்பப்படுத்தும் செயலாகும். அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
'அரசை விமர்சிக்க கூடாது, போராட்டம் நடத்த கூடாது' என்றெல்லாம் தி.மு.க.,வினர் கூறுவதை பார்த்தால், சர்வாதிகார ஆட்சியை நடத்த விரும்புறாங்களோ என்று தான் தோணுது!