PUBLISHED ON : ஜன 07, 2024 12:00 AM

பொள்ளாச்சி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: தமிழகத்தில் அனைத்து நகராட்சிகளும் பகலில் செயல்படுகிறது. பொள்ளாச்சி நகராட்சி மட்டும் மாலை, 6:00 மணி முதல் இரவு, 12:00 மணி வரை செயல்படுகிறது. இந்த நேரத்தில் தான், பல விஷயங்கள் அங்கு நடக்கின்றன. அதுவும், நகராட்சி தலைவர் கூட இல்லாத நேரத்தில், சம்பந்தமே இல்லாத நபர்கள் நகராட்சியை நடத்துகின்றனர். இதை அ.தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.வெறும் கண்டனம் மட்டும் தானா...? மூத்த அரசியல்வாதியான இவர், அங்கு என்ன நடக்கிறதுன்னு ஆதாரத்தோடு மக்கள் மன்றத்தில் முறையிடலாமே!
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: சென்னை மாநகர், புறநகர் மாவட்டங்கள் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, ஒரு மாதம் முடிந்து விட்டது. ஆனால், தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு இதுவரை வழங்காதது வருத்தம் அளிக்கிறது. சென்னையில் மத்திய குழு ஆய்வு நடத்தி, 20 நாட்களாகியும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த தாமதம் கண்டிக்கத்தக்கது.'அப்பன் வீட்டு சொத்து, பாட்டன் வீட்டு காசு'ன்னு, மத்திய அரசை வம்புக்கு இழுத்த ஆட்சியாளர்களும் இந்த தாமதத்திற்கு ஒரு காரணமா இருக்கலாம்!
தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்அறிக்கை: தமிழகத்தில், வேண்டா வெறுப்பாக, பெயரளவிற்கு மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிகிறது. தொகுப்பில் இரண்டு முழு கரும்பு வழங்க வேண்டும். வெல்லம், முந்திரி, திராட்சை, நெய் வழங்க வேண்டும். அப்போது தான் பொங்கலை நிறைவாக வைக்க முடியும். பரிசுத் தொகை 2,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். தென்னை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து இரண்டு தேங்காய் வழங்க வேண்டும்.விட்டா, அரசு சார்பில் ஒவ்வொரு வீட்டுக்கும் பொங்கல் வச்சு கொடுக்க ஆட்களையும் அனுப்ப சொல்வாரோ?
தி.மு.க., செய்தி தொடர்பு துணை செயலர் கோவை செல்வராஜ் அறிக்கை: 'திஹார் ஜெயிலில் பழனிசாமியை அடைக்க வேண்டியிருக்கும்' என, பன்னீர்செல்வம் கூறினார். 'விரைவில் சில வழக்குகளில் பன்னீர்செல்வம் சிறை செல்வார்' என, பழனிசாமி சொல்கிறார். இருவரும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருந்த போது செய்த தவறுகளை, ஒப்புதல் வாக்குமூலமாக தருகின்றனர். சி.பி.ஐ., அமலாக்கத் துறை, வருமானவரித் துறை வாயிலாக இருவரின் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏன் அவ்வளவு துாரம்...? இவங்க வசம் இருக்கிற தமிழக லஞ்ச ஒழிப்பு துறையே நடவடிக்கை எடுக்கலாமே!
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி:தமிழக அரசு, 37,000 கோடி ரூபாய் நிவாரண உதவி கேட்டதில், வெறும், 450 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது. மொத்தத்தில், 2.16 லட்சம் கோடி ரூபாய் தர வேண்டும். பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஒரு கண்ணில் வெண்ணெயும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் வைப்பது போல் மோடி அரசு ஓரவஞ்சகமாக செயல்படுகிறது.அதெல்லாம் சரி... லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு நடக்கும் போது, இவர் கட்சிக்கு எதுவும் ஓரவஞ்சனை நடந்திடாம பார்த்துக்கிட்டா நல்லது!
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'சமூக நீதியை நிலைநிறுத்துவது தான் திராவிட மாடல் ஆட்சியின் லட்சியம்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், இந்த சமூகத்தையே உயிரோட்டமாக வைத்திருக்க, இரவு, பகலாக அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய சம்பளம் மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?இப்படி சம்பள விவகாரத்தை எல்லாம், தி.மு.க.,வினரின் சமூக நீதி பட்டியலில் சேர்ப்பீங்கன்னு அவங்க எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க!
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேச்சு: ஜி.எஸ்.டி.,யில், 100 ரூபாய் வசூலித்தால், 50 ரூபாய் மத்திய அரசுக்கும், 50 ரூபாய் மாநில அரசுக்கும் நேரடியாக சென்றுவிடும். மத்திய அரசு வசூலிக்கும், 50 ரூபாயில், 21 ரூபாய் மாநில அரசுக்கு பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டு விடுகிறது. அதே வேளையில் மாநில அரசு வசூலிக்கும், 50 ரூபாயில் மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. இதுகுறித்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும். உரிமை தொகை, வெள்ள நிவாரணம், பொங்கல் தொகுப்புன்னு பணமழை பொழிஞ்சிடுறாங்களே... அப்புறம் யார் கேள்வி கேட்பாங்க?
ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு: எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும், மனித மேன்மையின் வளர்ச்சியில் இருக்க வேண்டும். பிறப்புக்கும், இறப்புக்கும் இடைப்பட்ட காலம், நமக்கு மட்டும் என இருக்கக் கூடாது. நாம் எல்லாருக்குமாக இருக்க வேண்டும்.இதை நம்ம திராவிட கட்சிகள் தவறாக புரிஞ்சிக்கிட்டு, 'நமக்கு மட்டுமல்ல... நம்மோட நாலு தலைமுறைக்கும் வேணும்'னு சொத்துக்களை வாரி குவிக்கிறாங்க!