Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/பேச்சு, பேட்டி, அறிக்கை/பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

PUBLISHED ON : ஜன 05, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: சென்னையில் அளவு குறைவான ஆவின் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்திருக்கும் புகார் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பால் பாக்கெட்டுகளும், 70 கிராம் வரை குறைவான எடையில் வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், ஆவின் நிர்வாகத்தில் மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்.

ஆவின்ல இப்ப ரொம்பவே சிறப்பான, நேர்மையான நிர்வாகம் நடக்கிற மாதிரி பேசுறாரே!



அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்றவுடன் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, அரசின் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு என, தமிழக மக்கள் வாட்டி வதைக்கப்பட்டனர். தற்போது, சொத்து வரி பெயர் மாற்றத்திற்கான கட்டணத்தை, 20,000 ரூபாயாக உயர்த்த, இந்த அரசு முடிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. நல்ல அரசு, மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும்.

என்னமோ, இவரது ஆட்சியில எந்த கட்டணங்களையும் ஏற்றாமல், இலவசமா மக்களுக்கு சேவை வழங்கியது மாதிரி பொங்குறாரே!

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேட்டி: தென் மாவட்டங்களில், மழை, வெள்ள பாதிப்புகளை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றுள்ளார். அதன்படி, தமிழகம் கேட்கும் நிவாரண தொகையை, மத்திய அரசு வழங்கும் என, நம்புவோம். பொங்கல் தொகுப்பில், 1,000 ரூபாய் ரொக்கம் தருவது பற்றி, முதல்வர் முடிவு எடுப்பார்.

'மத்திய அரசு ஏதாவது நிவாரண நிதி தந்தா தான், அதுல இருந்து எடுத்து பொங்கல் தொகுப்புக்கு பணம் தர முடியும்'னு சொல்ல வர்றாரா?

தமிழக முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதள பதிவு: உலக முதலீட்டாளர் மாநாடு துவங்க, இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அது குறித்த ஆர்வம், மென்மேலும் பெருகி வருகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் ஆவதற்கான செயல் திட்டத்தை, உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியிட, தமிழகம் மும்முரமாகிறது. தமிழகத்தின் துடிப்பு மிகுந்த தொழிற்சூழலை வெளிக்காட்டும், பிரமாண்டமான மாநாட்டில், வரும் 7, 8ம் தேதிகளில் இணைந்திடுங்கள்.

இந்திய பொருளாதாரம் வளரும் அதே வேகத்தில், தமிழக பொருளாதாரமும் வளரும் என்பதில் மாற்று கருத்தே இல்லை!





      Our Apps Available On




      Dinamalar

      Follow us