PUBLISHED ON : மார் 13, 2025 12:00 AM

தமிழக காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி: த.வெ.க.,
துவங்கியது முதலே, தி.மு.க.,வை விஜய் விமர்சித்து வருகிறார்.
ஆட்சியில் உள்ளதால், ஆட்சியை மாற்ற வேண்டும் என்று கூறி வருகிறார்.
மற்ற கட்சிகளை அவர் அதிகமாக விமர்சனம் செய்வதில்லை. அவரது
தாக்குதல் பெரும்பாலும் தி.மு.க., மீதுதான் உள்ளது. தி.மு.க., ஆட்சியை
அகற்ற வேண்டும் என்பது அவருடைய ஆசை, லட்சியம், கனவாக இருக்கலாம்.
ஆனாலும், எங்களுடைய கூட்டணி வலுவாக உள்ளது.
விஜய் கட்சி துவங்கியிருப்பதே, தி.மு.க., ஆட்சியை வீட்டுக்கு அனுப்பதான் என்ற உண்மை இவருக்கு தெரியாதோ?
திரைப்பட இயக்குநர் பேரரசு அறிக்கை: லோக்சபாவில் நம் பிரச்னைகளை பேசவே, எம்.பி.,க்களை மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். ஆ... ஊன்னா வெளிநடப்பு செய்வதற்கல்ல. மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று, விமான டிக்கெட் போட்டு, இருக்க வசதியான அறை; உணவு கொடுப்பதெல்லாம் எதற்கு... வெளிநடப்பு செய்யவா? இது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். வெளிநடப்பு செய்து சாதித்ததாய் ஒரு நிகழ்வும் இல்லை. வெளிநடப்பு உரிமை அல்ல; அது பொறுப்பின்மை. இதுவும் ஒரு ஜனநாயக துரோகம். அடிக்கடி வெளிநடப்பு செய்பவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு வேண்டும்.
இவர் சொல்வது நுாற்றுக்கு நுாறு சரிதான்... ஆனா, சபாநாயகர் நடவடிக்கை எடுத்தா, அதையும் கண்டித்து வெளிநடப்பு தான் பண்ணுவாங்க!
தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: கர்நாடகாவில், மேகதாது அணை கட்ட முயற்சிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. யார் நினைத்தாலும் அணை கட்ட முடியாது. இதில், தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க, எல்லாரும் ஒன்றிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.
'மேகதாது அணையை கட்டியே தீருவோம்'னு கர்நாடகாவுல இருக்கிற உங்க கட்சியினர் தானே அடம் பிடிக்கிறாங்க... உங்க தலைவி சோனியாவிடம் சொல்லி, அவங்களை கட்டுப்படுத்தி வைக்கலாமே!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பேட்டி: பல கட்சிகளில் எம்.பி., - எம்.எல்.ஏ., மாவட்ட செயலராக வேண்டும் என்றால் ஓட்டுக்கு, கட்சிக்கு பணம் செலவு செய்யக்கூடியவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது.
அரசியல் என்பது முதல் போட்டு லாபம் பார்க்கிற தொழிலாகிடுச்சு... கட்சிக்கு செலவு செய்து, அதிகாரத்துக்கு வந்ததும், அதை பல மடங்காக திருப்பி எடுக்கிறது தான் இன்றைய அரசியல்!