PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை:
'அண்ணாமலை
வாயால் வடை சுடுகிறார்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், உதயநிதி
உள்ளிட்டோர் சொன்ன வார்த்தையை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியும்
குறிப்பிடுகிறார். இரண்டு கட்சிகளும் பகைவர்கள் போல் நாடகமிட்டு, வடை
சுடுதல் பேசி, மக்கள் மண்டையில் மசாலா அரைக்கும் பங்காளி கூட்டணி. பா.ஜ.,
தமிழகத்தில் வளர்ந்து ஆட்சியை பிடிக்கும் சூழல் உருவாகும் போது, தி.மு.க., -
அ.தி.மு.க., கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மற்ற
மாநிலங்களில் ஆண்ட கட்சிகளில் ஒன்றை கரைத்து, பிரதான கட்சியாக பா.ஜ., வந்த
வரலாறு உண்டு... அது, தமிழகத்தில் அவ்வளவு சுலபம் இல்ல!
உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து பேச்சு: விவசாயிகளுக்கு ஏதாவது செய்தால் தான் பிறவிப்பயனுக்கு அர்த்தம். தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் உயர, பாமாயில் இறக்குமதியை தடை செய்து, தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகளில் வினியோகிக்க வேண்டும். விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்குவது மட்டுமே தெரிகிறது. அவை எங்கு செல்கின்றன என தெரிவதில்லை.
விவசாயத்துக்கு ஒதுக்குற நிதி மட்டும் தான் எங்க போகுதுன்னு தெரியலையா... மற்ற துறை நிதி எல்லாம் கரெக்டா தான் போகுதா?
பாரத் ஹிந்து முன்னணி தலைவர் பிரபு அறிக்கை: கொலை குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என்றால், காவல் துறை கைகளில் துப்பாக்கியை ஏந்த வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், உறுதி செய்யப்பட்ட பின் சுடுவதில் தவறு இல்லை. கொலை செய்பவர்கள் இவர்கள் தான் என ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் நிரூபித்து தண்டனை வழங்கலாம்; தவறில்லை. மனித நேயம் இல்லாமல் கொடூர குற்றம் செய்பவர்களை சுடுவதில் தவறில்லை.
ஆதங்கத்தில் இவர் சொன்னாலும், துப்பாக்கியை துாக்கும் முன் மனித உரிமைகள் ஆணையம் எல்லாம் போலீசார் கண் முன் வந்து நிற்குமே!
தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: அன்னிய நேரடி முதலீடுகளில், முதல் ஐந்து இடங்களில், ஐந்தாவதாக இருந்த தமிழகம், இந்த ஆண்டு ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம், இந்த ஆண்டு தமிழகத்தை விட அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது. திராவிட மாடல் தி.மு.க., அரசு தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் சூழலில், மாநில தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது.
கூட்டணி கட்சியான காங்., ஆளும் மாநிலம் என்பதால், தெலுங்கானாவுக்கு விட்டு கொடுத்திருப்பாங்களோ?