PUBLISHED ON : ஜூன் 24, 2024 12:00 AM

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை:
திருவண்ணாமலை
அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சுகாதார துறை
அமைச்சர் சுப்பிரமணியன் பேசுகையில், 'மருத்துவர்கள் மக்களுக்கு செய்யும்
சேவை, நேரடியாக ஆண்டவனுக்கே செய்யும் சேவை' என, பேசியுள்ளார். அதுபோல, அந்த
மருத்துவர்களுக்கு உரிய ஊதியம் வழங்க அரசு மறுப்பது, அந்த ஆண்டவனுக்கே
பொறுக்குமா என, அமைச்சர் நினைத்துப் பார்க்க வேண்டும்.
டாக்டர்களையும், கடவுளையும் ஒரே மாதிரியா பார்ப்பதால் தான், திராவிட மாடல் அரசு இருவரையுமே கண்டுக்கறது இல்ல போல!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
தேர்தல் வாக்குறுதிகளுக்கு முரணாக, தி.மு.க., அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்தால், ரேஷன் கடைகளில், 1 கிலோ கூடுதல் சர்க்கரை, உளுந்து வழங்கப்படும் என, கூறியிருந்தது. இந்த வாக்குறுதி, இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த துவரம் பருப்பு, பாமாயில், இரண்டு மாதங்களாக வழங்கப்படவில்லை.
'நாங்க சொன்னதை மட்டுமல்ல; சொல்லாததையும் செய்வோம்'னு முதல்வர் அடிக்கடி சொல்வாரே... ஒரு வேளை அது, இதுவா தான் இருக்குமோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அறிக்கை:
கள்ளச்சாராயத்தால் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள், மருத்துவமனைகளிலும், சாலைகளிலும் கதறிக் கொண்டிருக்கும் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன. இத்தனைக்கு பிறகும், திரைத்துறையை சேர்ந்தவர்களிடம் இருந்து ஒரு குரலும் வரவில்லை. நடிகர் விஜய் மட்டும், தனக்கு வாய்ப்பளித்து வளர்த்து விட்ட தமிழர்களுக்கு, இடர் நேரங்களில் துணை நிற்க வேண்டும் என, உணர்ந்து குரல் கொடுத்துள்ளார்.
என்ன தான் விஜய்க்கு இவங்க வலை வீசினாலும், தலைவா படத்தை வெளியிடுறதுக்கு அவரை, இவங்க ஆட்சியில் பாடாய்ப்படுத்தியதை அவ்வளவு எளிதா மறந்துடுவாரா என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
மத்திய அரசின் நெல் கொள்முதல் விலை போதுமான அளவில் இல்லை எனும் போது, அதை ஈடு செய்யும் வகையில், தமிழக அரசு தான் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஒடிசா அரசை பின்பற்றி தமிழக அரசும், நெல்லுக்கு குவிண்டாலுக்கு, 800 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, விவசாயிகளுக்கு, 3,120 ரூபாய் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த கூட்டணி பலமும், எதிர்க்கட்சிகளின் பலவீனமும் இருக்கும் வரை, நெல்லுக்கு மட்டுமல்ல, எதுக்குமே தமிழக அரசு நல்ல விலை தராது!