PUBLISHED ON : ஜூன் 21, 2024 12:00 AM

தி.மு.க., வர்த்தகர் அணி செயலர் கவிஞர் காசி முத்துமாணிக்கம் அறிக்கை:
ஈரோடு
இடைத்தேர்தலில் பா.ஜ., - பா.ம.க., - பன்னீர்செல்வம் நிற்காமல்,
அ.தி.மு.க., வின்இரட்டை இலையை ஆதரித்தனர். இப்போது, விக்கிரவாண்டி
இடைத்தேர்தலில், பா.ம.க., வேட்பாளரை அ.தி.மு.க., மறைமுகமாக ஆதரிக்கும்.
ஆயினும், ஈரோட்டில் அ.தி.மு.க., வுக்கு முடிவு எப்படி இருந்ததோ,
அப்படித்தான் பா.ம.க.,வுக்கும் விக்கிரவாண்டியில் இருக்கும். அ.தி.மு.க.,
தேர்தலில் நிற்காதது, பா.ம.க.,வுக்கு உதவி செய்யத் தான் என்பது ஊருக்கே
தெரியும்.
அது சரி... பா.ஜ., கூட்டணிக்கு எதிரான அ.தி.மு.க.,வினர் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு விழும் என்ற நம்பிக்கை இவருக்கு இல்லையோ?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: 'திருநெல்வேலி கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு, சமூக விரோதிகளோடு, காவல் துறை கை கோர்த்துக் கொண்டதுதான் காரணம்' எனக் கூறும் மா.கம்யூ., தலைமை, இன்னும் ஏன் தி.மு.க.,வோடு கை கோர்த்து கொண்டிருக்க வேண்டும். சமூகநீதி பேசும் கம்யூனிஸ்ட் தலைவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் தி.மு.க.,வோடு தொடர்ந்து பயணிப்பதில் என்ன, 'லாஜிக்' இருக்கிறது.
இவரது கருத்தை பார்த்தால், 'சட்டுபுட்டுன்னு தி.மு.க.,வுக்கு டாட்டா காட்டிட்டு, நம்ம பக்கம் வந்துடுங்க'ன்னு அழைக்கிற மாதிரி தெரியுதே!
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'இந்தியாவில் ஓட்டுப்பதிவு இயந்திரம் என்பது ஒரு கருப்பு பெட்டி. இதை ஆராய்வதற்கு யாரையும் அனுமதிப்பதில்லை' என, ராகுல் கூறியுள்ளார். அப்படியென்றால் தமிழகம், புதுவையில் 40க்கு 40 தொகுதிகளில், கருப்பு சிவப்பு மற்றும் காங்கிரஸ் கூட்டணி வென்றதற்கு, இந்த கருப்பு பெட்டிதான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா.
அதே மாதிரி வயநாடு, ரேபரேலின்னு ரெண்டு தொகுதி கள்ல ராகுல் ஜெயிச்சதுக்கும் அந்த கருப்பு பெட்டிதான் காரணமா?
அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்கும், தமிழக அரசின் தொழிலாளர் விரோதப் போக்கு, கடும் கண்டனத்துக்கு உரியது. தனியார் நிறுவனங்கள் வழியே, ஒப்பந்த அடிப்படையில், பணியாளர்களை நியமிக்கும் முடிவை, உடனடியாக கைவிட வேண்டும்.
தனியார் மயத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் காம்ரேட்களும், தோழர்களும் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்?