PUBLISHED ON : ஜூன் 13, 2024 12:00 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: நீட்
தேர்வு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் எழக்கூடிய இந்த கால கட்டத்தில்,
நேர்மையான முறையில் தேர்வு நடத்த மத்திய சுகாதாரத் துறைக்கு மிகப்பெரிய
பொறுப்பு இருக்கிறது. நீட் தேர்வு முறைகேடு குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி
தலைமையில் குழு அமைத்து, உண்மைத் தன்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
தொட்டதுக்கு எல்லாம் குழு அமைக்கிற திராவிட மாடல் ஆட்சியாளர்களை, மத்திய அரசும் பின்பற்றணும்னு சொல்றாரா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அறிக்கை: டெல்டா மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் வெயிலில் நெற்பயிர்கள் காய்ந்து கருகின. தற்போது கோடை மழையால் வயல்களில், மழைநீர் தேங்கி பயிர்கள் சேதமடைந்துள்ளன. லோக்சபா தேர்தல் வெற்றி களிப்பில் மூழ்கியுள்ள தி.மு.க., அரசு, தற்காலிக சந்தோஷத்தை தள்ளி வைத்துவிட்டு, விவசாயிகளின் துயரங்களை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க., தன் கைக்கு வரும்; பழைய மாதிரி நாட்டாமை பண்ணலாம்' என இவங்க நினைப்பது தான் நிரந்தர சந்தோஷமோ?
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: மத்திய மந்திரியாகி அண்ணாமலை அப்படியே டில்லி பக்கமாக போயிடணும் என, எதிர் தரப்புகளின் பிரார்த்தனையை பார்த்தாலே, தமிழகத்தில் அண்ணாதுரைக்கு பிறகான திராவிட அரசியலுக்கு பெருத்த நெருக்கடியை, அண்ணாமலைக்கு பிறகான தேசிய அரசியல் ஏற்படுத்தி இருக்கிறது என்பது தெரிகிறது.
அண்ணாமலைக்கு கிடைத்த தேர்தல் தோல்வியை, 'ரவுண்டு' கட்டி திராவிட மாடல் ஆட்சியாளர்கள் கலாய்த்ததன் நோக்கமே அதுதானே!
அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை அறிக்கை: தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் மற்றும் ஒப்புகை சீட்டுகளை மறுபடியும் எண்ணி சரிபார்க்க, தலா 40,000 ரூபாய், ஜி.எஸ்.டி., 5 சதவீதம், ஒரு ஓட்டுப்பதிவு இயந்திர செட்டுக்கு செலுத்த வேண்டும். ஒரு லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகளை மீண்டும் சரி பார்க்க, 40 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு பெயர் ஜனநாயகமா அல்லது பணநாயகமா?
அவ்வளவு தொகை நிர்ணயிக் கலைன்னா, தோல்வியடைந்த பாதி பேர் மறுபடியும் எண்ணுங்கன்னு வரிசை கட்டி வருவாங்களே!