PUBLISHED ON : மே 29, 2025 12:00 AM

மதுரை, சோழவந்தான் அ.கோவில்பட்டியில் கட்டப்பட்டு வரும், ஆதிதிராவிடர் நல மைய சமுதாயக் கூடத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
'ஆதிதிராவிடருக்கான மயானங்களில் அடிப்படைவசதிகளே இல்லை' என, அங்கிருந்த ஒருவர் தெரிவிக்க, 'பொதுவாக சொல்ல வேண்டாம்; எந்த இடம் என்று சொல்லுங்கள்' என்றார் அமைச்சர்.
'இங்கே கொண்டையம்பட்டியில் கூரை இல்லாததால், தார்ப்பாய்களை வைத்து தடுப்பு போட்டுள்ளனர்' என்று அந்த நபர் சொல்லவே, 'இதுபோன்று மாநிலங்களில் சிறுசிறு பிரச்னைகள் உள்ளன. விரைவில் சரி செய்து தருவோம். இங்கே, சுப நிகழ்ச்சிகளுக்காக சமுதாயக் கூடம் கட்டப்படுகிறது' என்றார் அமைச்சர்.
விடாக்கண்டனான அந்த நபர், 'சுப நிகழ்ச்சிகளை விட மயானம் முக்கியம் இல்லையா' என, மறுபடியும் கேட்க, 'உண்மைதான். ரொம்ப முக்கியம், கண்டிப்பாக சரி செய்து தருவோம்' என்றபடியே, அவசரமாக நகர்ந்தார் அமைச்சர்.
விடாக்கண்டன் அருகில் இருந்தவர், 'கேள்வி மேல கேள்வி கேட்டு, அமைச்சரை விரட்டி விட்டுட்டாரே...' என்றபடியே நகர்ந்தார்.