PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி, திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், 'மாநில அரசு நிறைவேற்றும் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு தான் கவர்னர் செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாவுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் கவர்னர், ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க வேண்டும். வேண்டுமானால், உச்ச நீதிமன்றத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்கலாம். அதற்கு விளக்கம் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் உச்ச நீதிமன்றத்தின் முடிவு.
'ஜனாதிபதி மூலம் விளக்கம் கேட்கும் யுக்தியை பா.ஜ., அரசு கையாண்டுள்ளது. கவர்னர் மூலம் மாநில அரசை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது...' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'கவர்னர் மூலம், மாநில அரசு களை கட்டுப்படுத்தும் கலையை கண்டுபிடிச்சதே காங்கிரஸ் தானே... அதை பா.ஜ.,வினர், 'பாலோ' பண்றாங்க...' என, முணுமுணுத்தபடியே நடந்தார்.