PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

துாத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. கணேசன் என்ற விவசாயி பேசும்போது, 'கோவில்பட்டியில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்க வேண்டிய 630 மூட்டை யூரியா உரம், தனியார் கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையின் முடிவில், அந்த 630 மூட்டை உரங்களும் எந்தெந்த கூட்டுறவு சங்கங்களில் இருந்து எடுக்கப்பட்டது என்ற விபரத்தை தெரிவிக்க வேண்டும்' என கேட்டார்.
'போலீசார் விசாரணைக்கு பின், குற்றப்பத்திரிகை விபரம் நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்யப்படும்' என, கலெக்டர் விளக்கம் அளித்தும், விடாத கணேசன், '630 யூரியா மூட்டை உரங்களுக்கும் கணக்கு வேண்டும்' என, மீண்டும் மீண்டும் அதையே கூறினார்.
உடனே கலெக்டர், 'எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்பது போல, இவர் நம்மை விட மாட்டார் போலிருக்கே...' என, 'கமென்ட்' அடிக்க, சக அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.