PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

திருச்சி, தி.மு.க.,வில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு மற்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் தலைமையில், தி.மு.க.,வினர் தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள், அரசு விழாவாக சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அந்த நாளை முன்னிட்டு, திருச்சி, ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அமைச்சர் நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், கலெக்டர் பிரதீப்குமார் ஆகியோர் ஒன்றாக வந்து, மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். இதில், அமைச்சர் மகேஷ் கலந்து கொள்ளவில்லை.
அதன் பின், தன் ஆதரவாளர்களுடன் மகேஷ் தனியாக வந்து, சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
இதை பார்த்த, தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'கடல்ல அலை ஓய்ந்தாலும் ஓயும் போலிருக்கு... நேரு, மகேஷ் அணியினர் ஒற்றுமை மட்டும் நடக்கவே நடக்காது போலிருக்கே...' என, புலம்பியபடியே நடையை கட்டினார்.