PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களை தொடர்ந்து, தமிழக அரசை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காமராஜ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி வந்து, அருகில் இருந்த மோரி வாய்க்காலில் கொட்டியவாறு பத்திரிகை போட்டோ கிராபர்களுக்கு, 'போஸ்' கொடுத்தனர்.
அவ்வழியாக வந்த, 'குடி'மகன் ஒருவர், மதுவை கால்வாயில் கொட்டுவதை பார்த்து அதிர்ச்சியாகி, 'கீழே ஊத்துறதுக்கு பதிலா என்னிடமாவது கொடுங்கள்' என, கேட்டார். கட்சியினர் கண்டுகொள்ளாத நிலையில், நீண்ட நேரமாக அங்கேயே நின்று மன்றாடினார். ஒரு கட்டத்தில் பாவம் பார்த்து, கொட்டியது போக மீதம் இருந்த மதுவை அவரிடம் கொடுக்க, மகிழ்ச்சியாக வாங்கி சென்றார்.
இதை பார்த்த பார்வையாளர் ஒருவர், 'இந்த லட்சணத்துல ஆட்களை வச்சிக்கிட்டு பூரண மதுவிலக்கு வேணுமாம்...' என, தலையில் அடித்தபடியே நகர்ந்தார்.