PUBLISHED ON : ஜூன் 15, 2024 12:00 AM

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கக் கோரி, தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மேட்டூரில் பேரணி நடந்தது. இதில், விவசாயிகள் சங்க தலைவர் பாண்டியன் பேசுகையில், 'கர்நாடகாவுக்கு தமிழகம், தெலுங்கானா, புதுச்சேரி, கோவா என, சுற்றியுள்ள மாநிலங்களுடன் தண்ணீர் பிரச்னை உள்ளது. ஆனால், கர்நாடகாவை சேர்ந்த சோமண்ணாவை, மத்திய அரசு ஜல்சக்தி துறைக்கு இணை அமைச்சராக்கியுள்ளது. இதனால், தென் மாநிலங்களில் நதி நீரால் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது உண்மை தான்... ஆனால், தென்மாநிலங்களில் பா.ஜ.,வை கொண்டாடுவது கர்நாடகம் மட்டும் தான் என்பதால், அம்மாநிலத்தை சேர்ந்தவருக்கு சிறப்பு பரிசா ஜல்சக்தி துறையை கொடுத்திருக்காங்க... நாம வழக்கம் போல புலம்ப வேண்டியது தான்...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.