PUBLISHED ON : ஜூன் 26, 2024 12:00 AM

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துாரில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா மற்றும் லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில், தமிழக சிறு, குறு தொழில் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றார்.
அவர் பேசுகையில், 'லோக்சபா தேர்தலில் தி.மு.க., வெற்றி பெற்றதால், நம்மை பழிவாங்க விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., -- பா.ஜ., கள்ள கூட்டணி வைத்து வேலை செய்வர். வேகமா இருந்த பா.ஜ., இப்ப ஆளே இல்லாம போய் விட்டது.
'தி.மு.க.,காரன் முடிவு பண்ணிட்டா முடிக்காம விட மாட்டான். ஓராண்டா வீடு, வீடா போய் ஓட்டு கேட்டு, தப்பி தவறி கூட பா.ஜ., உள்ளே வந்துடாம தீயா வேலை செய்து வெற்றி பெற்றுள்ளோம்' என்றார்.
பார்வையாளர் ஒருவர், 'ஆக மொத்தத்துல அ.தி.மு.க.,விற்கு பதிலா பா.ஜ.,வை தி.மு.க., எதிரியா நினைக்க துவங்கி விட்டது... இதுவே பா.ஜ.,வுக்கு வெற்றி தான்...' என, முணுமுணுக்க, உடன் இருந்தவர் ஆமோதித்து தலையாட்டினார்.