PUBLISHED ON : ஜூலை 10, 2024 12:00 AM

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அரங்கில், ஜப்பான் நாட்டுக்கான ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிப்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில், சங்கத்தின் மூத்த உறுப்பினர் மைக்கோ வேலுசாமி பேசுகையில், 'ஒருமுறை டோக்கியோ கண்காட்சிக்கு சென்றிருந்தேன். ஆடை தயாரிப்பு ஆர்டர் பெறலாம் என்ற நம்பிக்கையில், கண்காட்சியில் வழங்கிய எண்ணுக்கு வர்த்தகரை தொடர்பு கொண்டேன். அவர் என் போன் அழைப்பை ஏற்கவில்லை' என்றார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், கோவையில் இயங்கும் ஜப்பானுக்கான தர பரிசோதனை நிறுவன பிரதிநிதி கார்த்திக் பேசுகையில், 'ஜப்பானியர்கள் பஸ், ரயில் உள்ளிட்ட பயணங்களின் போதும், பொது இடங்களில் வைத்தும் மொபைல் போன் பயன்படுத்த மாட்டார்கள். எப்போதுமே கட்டுப்பாடுகளை மீற மாட்டார்கள்' என்றார்.
இதைக் கேட்ட ஏற்றுமதியாளர் ஒருவர், 'அட, மிஸ்டு கால் பார்த்து திரும்ப கூப்பிடக் கூடாதா... இதுவும் அந்த நாட்டு கட்டுப்பாடா...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.