PUBLISHED ON : ஜூன் 17, 2024 12:00 AM

விழுப்புரத்தில் நடந்த, தெற்கு மாவட்ட, தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், மாவட்ட செயலராக நியமிக்கப்பட்டுள்ள, தன் மகன் கவுதம சிகாமணி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர் சிவா ஆகியோரை, அமைச்சர் பொன்முடி அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், 'கவுதம சிகாமணி, 25 ஆண்டுகளுக்கு முன்பே விழுப்புரத்தில், தளபதி நற்பணி மன்றத்தை துவக்கி, கட்சிக்காக பணியாற்றி வருகிறார். அதனால் தான் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர், அவரை மாவட்ட செயலராக அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வகையில் தான், 1989 முதல், கட்சிக்காக பணியாற்றி வரும் சிவாவையும், இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவித்துள்ளனர். தி.மு.க., குடும்ப கட்சி தான். குடும்பம், குடும்பமாக, காலம் காலமாக கட்சிக்காகவும், மக்களுக்காகவும் உழைப்பவர்கள், பாடுபடுபவர்கள் நாம்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அமைச்சர் நல்லா கம்பி கட்டுறாரு... அப்ப, விழுப்புரத்துல வேற யாரும் கட்சி பணி செய்யலையா...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.