PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

செப்டம்பர் 10, 1862
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப் பூண்டிக்கு அருகில் உள்ள பின்னத்துார் கிராமத்தில், அப்புசாமி ஐயர் - சீதாலட்சுமி தம்பதியின் மகனாக, 1862ல் இதே நாளில் பிறந்தவர் நாராயணசாமி ஐயர்.
இவர், தன் தந்தையிடம் சமஸ்கிருதத்தையும், ஒரே நேரத்தில் பல விஷயங்களை நினைவில் நிறுத்தும் அவதான கலையையும் கற்றார். துவக்க கல்வியை, கிருஷ்ணாபுரம் முத்துராம பாரதி திண்ணை பள்ளியில் படித்தார். தொடர்ந்து வேதங்களையும், தமிழ் இலக்கண, இலக்கியங்களையும் மொழி அறிஞர்களிடம் கற்று, கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.
அங்கு பணியாற்றிய தி.வை.சதாசிவ பண்டாரத்தார் உள்ளிட்டோருடன் பழகியதால், 'நற்றிணை' உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை எழுதினார்.
புதுக்கோட்டை சமஸ்தானம் பற்றி இவர் எழுதிய, 'இயன்மொழி வாழ்த்து' நுால், அம்மாவட்டத்தின் ஆவணமாக உள்ளது. சமஸ்கிருதத்தில் காளிதாசன் எழுதிய, 'பிரகசன' என்ற நாடக நுாலை தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், 'இடும்பாவன புராணம், சிவ புராணம், மருதப்பாட்டு' உள்ளிட்ட நுால்களை எழுதி வெளியிட்ட இவர், தன் 52வது வயதில், 1914, ஜூலை 30ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!