PUBLISHED ON : மார் 15, 2025 12:00 AM

மார்ச் 15, 1938
திருப்பத்துாரில், 1938ல், இதே நாளில் பிறந்தவர் தி.சு.சதாசிவம்.
இவர், பெங்களூரில் உள்ள, 'டெலிபோன் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதேநேரம், தமிழில் அரசியல் கட்டுரைகள், கதைகளை எழுதினார். கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளின், 25க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.
சின்னத்திரை, பெரிய திரைகளில் நடித்தார். கன்னட எழுத்தாளர் சாரா அபுபக்கரின், 'சந்திரகிரி ஆற்றங்கரையில்' என்ற புதினத்தை தமிழில் மொழிபெயர்த்து, 1997ல், 'சாகித்ய அகாடமி' விருது பெற்றார்.
இவர் எழுதிய, 'தலித் இலக்கியத்தின் போக்கும் வளர்ச்சியும், ஒரு கிராமத்தின் சித்திரம், அந்தரத்தில் நின்ற நீர்' உள்ளிட்ட நுால்கள் பிரபலமானவை. 'திருப்பூர் தமிழ் சங்கம், நல்லி திசை எட்டும்' உள்ளிட்ட அமைப்புகளின் விருதுகளை பெற்றுள்ள இவர், 2012 பிப்ரவரி 5ல், தன் 74வது வயதில் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!