PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

ஜூலை 19, 1987
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில், கே.எஸ்.சுப்பிரமணியம் - சாவித்ரி தம்பதியின் மகனாக, 1942, மார்ச் 21ல் பிறந்தவர், ஆதவன் எனும் கே.எஸ்.சுந்தரம்.
இவரது தந்தை, தபால் தந்தி, பாதுகாப்பு துறைகளில் பணியாற்றியதால், குடும்பம் டில்லிக்கு மாறியது. பள்ளி, கல்லுாரி படிப்பை அங்கு முடித்தார். பள்ளி பருவத்தில், 'அணுகுண்டு' எனும் கையெழுத்து பத்திரிகை நடத்தினார்.
'கண்ணன்' இதழில் சிறுகதைகள் எழுதினார். கல்லுாரி காலத்தில், 'ஆனந்த விகடன்' இதழில், 'தாஜ்மகாலில் ஒரு பவுர்ணமி' என்ற முத்திரை சிறுகதையை எழுதினார். தொடர்ந்து, 'தீபம், கணையாழி' உள்ளிட்ட இதழ்களில் தொடர்கதை எழுதினார். ரயில்வேயில் பணியாற்றிய இவர், அதை விட்டு, 'நேஷனல் புக் டிரஸ்ட்'டின் தமிழ் பிரிவு துணையாசிரியராக டில்லி, பெங்களூரு கிளைகளில் பணியாற்றினார்.
பாரதியாரின் வாழ்க்கை வரலாற்றை, 'புழுதியின் வீணை' என்ற நாடகமாக எழுதினார். இவர், கர்நாடகாவில் பணியாற்றிய போது, துங்கா நதி சுழலில் சிக்கி, 1987ல் தன் 45வது வயதில், இதே நாளில் மறைந்தார்.
தன் மறைவுக்கு பின், 'முதலில் இரவு வரும்' என்ற சிறுகதை தொகுப்புக்காக, 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளரின் நினைவு தினம் இன்று!