PUBLISHED ON : ஜூலை 03, 2024 12:00 AM

ஜூலை 3, 1928
திருவண்ணாமலை மாவட்டம், குத்தனுார் அய்யா சுவாமி அய்யர் -- லலிதாங்கி தம்பதியின் மகளாக, 1928ல் இதே நாளில் பிறந்தவர் மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி எனும், எம்.எல்.வசந்தகுமாரி.
இவரின் பெற்றோர் இசைக் கலைஞர்கள். இவர், சென்னையில் கான்வென்ட் பள்ளியில் படித்தபோது, தன் தாயின் கச்சேரிகளில் பின்பாட்டு பாடி வந்தார். ஒரு கச்சேரியில், இவரின் இனிமையான குரலை கேட்ட ஜி.என்.பாலசுப்பிரமணியம், தன் சிஷ்யையாக சேர்த்து, இசைப் பயிற்சி அளித்தார்.
இவர், கடினமான ராகங்களையும், கல்பனா ஸ்வரங்களுடன் இனிமையாக ஆலாபனை செய்வதில் தேர்ச்சி பெற்றார். பாலக்காடு மணி அய்யர், மன்னார்குடி ஈஸ்வரன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ் உள்ளிட்டோர் பக்க வாத்தியம் வாசிக்க, நாராயண தீர்த்தரின், 'கல்யாண கோபாலம்' புரந்தரதாசரின் 'வெங்கடாசல நிலையம்' பாரதியாரின் 'சின்னஞ்சிறு கிளியே' உள்ளிட்ட பாடல்கள் இவரால் மேடை கச்சேரியில் பிரபலமாகின.
ராஜ முக்தி, கிருஷ்ண பக்தி, நல்லதம்பி, வாழ்க்கை, பணம், ரத்தக்கண்ணீர் உள்ளிட்ட படங்களில் பின்னணி பாடிய இவர், 'சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகளை பெற்று, 1990, அக்டோபர் 31ல் தன், 62வது வயதில் மறைந்தார்.
நடிகை ஸ்ரீவித்யாவின் தாய், 'எம்.எல்.வி.,' பிறந்த தினம் இன்று!