Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ முடிவுக்கு வருவது எப்போது?

முடிவுக்கு வருவது எப்போது?

முடிவுக்கு வருவது எப்போது?

முடிவுக்கு வருவது எப்போது?

PUBLISHED ON : ஜூன் 11, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.சுந்தாஸா, கும்பகோணத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோஹித் பதவி வகித்தபோது, ஆளும் கட்சி பரிந்துரையில், குறைந்தபட்ச தகுதி கூட இல்லாதவர்கள் பல்கலை துணைவேந்தராக நியமிக்கபட்டனர். இது ஊழலுக்கு வழிவகுப்பதாக கூறி, அது குறித்த ஆய்வில் ஈடுபட்டார், கவர்னர் பன்வாரிலால்.

இதை தொடர்ந்து, தமிழக அரசின் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை விசாரணை செய்ததில், பேராசிரியர் நியமனம், கூடுதல் மாணவர் சேர்க்கை, பொருட்கள் கொள்முதல் போன்றவற்றில் துணைவேந்தர்கள் ஊழல் செய்துள்ளதாகவும், மத்திய - மாநில நிதியில் முறைகேடு செய்வதாகவும் அறிக்கை வெளியிட்டனர்.

தகுதி அடிப்படையில் துணைவேந்தர் பணி நியமனம் நடைபெற, துணைவேந்தர் தேர்வு கமிட்டியில், யு.ஜி.சி., இடம்பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு, வேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பல்கலை மானிய குழுவின் நியதிகளை மதிக்காமல், துணை வேந்தர்களை நியமிக்க முன்னெடுத்த தமிழக அரசின் பரிந்துரையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார், தமிழக கவர்னர் ரவி.

இதற்கிடையில், துணைவேந்தர் நியமனத்தில் தடை ஏற்படுவதாக கூறி, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, 'தமிழக அரசே துணைவேந்தரை நியமிக்கலாம்' என்று தீர்ப்பளித்தது, உச்ச நீதிமன்றம்.

அதேநேரம், தமிழக அரசால் நியமிக்கப்படும் துணைவேந்தர்களின் ஊழல் மற்றும் அரசியலை நீதிமன்றம் மறந்து விட்டது.

திராவிட மாடல் அரசோ, 'இத்தீர்ப்பு சரித்திர புகழ் பெற்றது' என்று பறைசாற்றி, பாராட்டு விழாக்களை நடத்தி, கவர்னர் ரவியை மேடைதோறும் வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில், 'கல்வி மத்திய பட்டியலில் இருப்பதாலும், பல்கலை மற்றும் பல்கலை மானிய குழுவின் அதிகார வட்டத்திற்குள் இருப்பதாலும், வேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை' என்று பொதுநல வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் துணைவேந்தர் நியமனத்திற்கு தடை விதித்துள்ளது.

அதிகார வர்க்கத்தினரின் சண்டையில், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றம் இப்பிரச்னையை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



இயற்கையோடு மோதும் மனிதர்கள்!


சோ.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கனிம வளங்கள் மீது தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர்' என்று வேதனை தெரிவித்துள்ளார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி.

மேலும், 'இயற்கை வளங்களை கொள்ளையடிக்கும் இந்த கொள்ளையருக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது' என்றும் கூறியுள்ளார்.

கனிமவள கொள்ளை, மரங்களை வெட்டி அழித்தல், ஆற்று மணலை சுரண்டுதல் என இயற்கைக்கு எதிராக மனித தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

சொகுசு வாழ்க்கைக்காக இயற்கை வளங்களை சுரண்டுகின்றனர். இதற்கான மாற்று வழி முறைகளை அரசு ஏற்படுத்த வேண்டும்.

இயற்கை வளங்களை அழித்து விட்டால், பின், அவற்றை எளிதில் மீட்டெடுக்க முடியாது.

அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக கனிம வளங்களை வெட்டி எடுத்து, கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர், ஒப்பந்ததாரர்கள்.

ஆட்சி மாறினாலும், இவர்களது அராஜகம் மாறு வதில்லை. காரணம், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.

கனிமவள கொள்ளையர்கள் அரசியல்வாதிகளுக்கு பணத்தை அள்ளிக் கொடுத்து, பதிலுக்கு பூமியை சிதைக்கின்றனர்.

மனிதர்களின் இத்தகைய கொடூர தாக்குதலுக்கு இயற்கை பதிலடி கொடுக்கத் துவங்கினால், மனித குலமே அழிந்து போகும் என்பதை அரசு உணர வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் அனைவருமே ஏதாவது ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் தான்.

ஒவ்வொரு கட்சி தலைவரும் தங்கள் கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரர்களை கட்டுப்படுத்தினாலே, பூமியை ஓரளவு காப்பாற்ற முடியும்.

ஆனால், எந்த அரசியல்வாதி இதை செய்ய முன்வருவார்?

இங்கு மக்களுக்கான அரசியலா நடக்கிறது? தேர்தல் அரசியல் நடத்தும் அரசியல் வியாபாரிகளிடம் ஆக்கப்பூர்வமான விஷயங்களை எதிர்பார்க்க முடியுமா?



தவறென்ன இருக்கிறது?


பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: த.வெ.க., தலைவர் நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது விழா குறித்து, '2 கிராம் தங்கம் பரிசாக கொடுத்ததும், வீட்டிலிருக்கும் பெண்களை நம்மாளு அழைத்து செல்கிறான். வயதுக்கு வந்த பெண், தன் பெற்றோர் மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், ஒரு சினிமா கூத்தாடியை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுப்பதை எப்படி அனுமதிக்க முடியும்? இதுதான் தமிழன் கலாசாரமா?' என்று கேட்டுள்ளார், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.

அவர் இவ்வளவு கொதிப்படையும் அளவுக்கு அந்த விழாவில் விரசமாக எதுவும் நடந்து விடவில்லையே...

வயது வந்த பெண்கள் என்றாலும், அம்மாணவியர் குழந்தைகள் போன்று தான் இருந்தனர். அவர்களில் ஒருசிலர் சந்தோஷ மிகுதியால் விஜயை கட்டிப்பிடித்தோ, முத்தமிடவோ செய்தனர்.

அதில், அண்ணன் - தங்கை பாசம்தான் தெரிந்ததே தவிர, வேல்முருகன் கண்களுக்கு தெரிந்தது போல் ஆபாசமாக தெரியவில்லை.

காமாலை கண்களுக்கு காண்பது எல்லாம் மஞ்சளாகத் தான் தெரியும்; அது பார்ப்பவரின் குற்றமே தவிர, விஜயின் குற்றமல்ல.

லஞ்சம், ஊழல், கனிம வளக் கொள்ளை, மதுவிலக்கு, கள்ளச்சாராய மரணங்கள், போதைப்பொருள் பயன்பாடு, வாரிசு அரசியல், முறையற்ற நீர் மேலாண்மை, இலவசங்கள் கொடுத்து மக்களை கையேந்த வைப்பது, வேலைவாய்ப்பின்மை, தமிழகத்தின் கடன்சுமை என்று வேல்முருகன் பேசுவதற்கு தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன.

அதுகுறித்து பேசாதவர், கூட்டணி தலைவரை திருப்திபடுத்தவே விஜயை விமர்சிக்கிறார்.

ஊழல் செய்து கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துள்ள பணத்தில் கூட மக்களுக்கு சிறு நன்மை செய்யவும் அரசியல்வாதிகளுக்கு மனம் வருவதில்லை.

ஆனால், தான் உழைத்து சம்பாதித்த பணத்தில், மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக பரிசளித்தால், அதை விமர்சிக்க வந்து விடுகின்றனர்.

'தானும் தர மாட்டானாம்; பிறர் தருவதையும் தட்டி விடுவானாம் தர்ம பிரபு' என்பது போல், அடுத்தவர் செய்யும் நன்மையை பாராட்ட மனம் இல்லை என்றாலும், விமர்சிக்காமல் இருக்கலாமே!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us