Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ மனிதர்கள் தான்; பொம்மைகள் அல்ல!

 மனிதர்கள் தான்; பொம்மைகள் அல்ல!

 மனிதர்கள் தான்; பொம்மைகள் அல்ல!

 மனிதர்கள் தான்; பொம்மைகள் அல்ல!

PUBLISHED ON : மார் 08, 2026 01:34 AM


Google News
Latest Tamil News
எம்.மதியழகன், பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: துணை முதல்வர் உதயநிதியின் தேர்தல் சுற்றுப் பயணத்தில், பாதுகாப்பிற்காக நிற்கும் பெண் மற்றும் ஆண் காவலர்கள், மாலை 4:00 முதல், காலை 6:00 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இது மட்டுமல்ல... பல்வேறு கட்சி பொதுக்கூட்டங்களின் போதும், அரசியல் தலைவர்களின் சுற்றுப் பயணத்தின் போதும் போலீசார் நீண்ட நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அதேநேரம், அவர்களது உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளையும், இயற்கை உபாதைகள் கழிக்க எந்த முன்னேற்பாடுகளையும் சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள் செய்து தருவதில்லை. போலீஸ்காரர்கள் என்றால் அவர்கள் உடம்பு என்ன இரும்பாலா செய்து வைக்கப்பட்டுள்ளது? எட்டு, பத்து மணி நேரம் இடைவிடாமல் காவல் பணியில் ஈடுபடுவோருக்கு தாகம் எடுக்காதா, இயற்கை உபாதைகளை கழிக்க தோணாதா?

அவர்கள் மனிதர்கள் தானே, மண்ணால் செய்த பொம்மைகள் அல்லவே!

தேர்தல் சுற்றுப் பயணம் செய்து வரும் அரசியல் கட்சி தலைவர்கள், சம்பவ இடத்திற்கு வருவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன், பாதுகாப்பு பணிக்கு போலீசார் வந்தால் போதாதா?

எனவே, அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் அவர்கள் கஷ்டம் புரிந்து மனிதாபிமானத்துடன் வேலை வாங்க வேண்டும்!

முஸ்லிம் லீகோடு ஒப்பிட்டது தவறு!

ஆர்.சுப்பையா, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'காங்கிரசை முஸ்லிம் லீகுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பது அரசியல் விரக்தியின் அடையாளம். சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத கட்சியை சேர்ந்த பிரதமர் மோடி, விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய காங்., கட்சியை, நாட்டை பிளவு படுத்துவதாக குற்றம் சாட்டுவது அபத்தமானது' என்று கூறியுள்ளார், காங்., கட்சியை சேர்ந்த ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்.

ஆர்.எஸ்.எஸ்., சுதந்திர போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது, காங்கிரசார் நீண்ட காலமாக கூறிக் கொண்டிருக்கும் அபத்தமான குற்றச்சாட்டு.

சாவர்க்கர் எனும் ஆர்.எஸ்.எஸ்.,காரரை பிரிட்டிஷ் அரசு அந்தமான் செல்லுலார் சிறையில் கைகளிலும், கால்களிலும் விலங்கிட்டு, இயற்கை உபாதையை கழிக்க மூலையில் ஒரு பாத்திரத்தை வைத்து, கொசுக்கடித்தால் சொறிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் சிறைபடுத்தி வைத்திருந்ததே... அது எதற்கு? சாவர்க்கர் திருடினார் என்பதற்காகவா இல்லை கொள்ளை யடித்தார் என்பதற் காகவா?

காங்., கமிட்டியின் இணைச் செயலராக இருந்தவரும், ஆர்.எஸ்.எஸ்., ஸ்தாபகருமான ெஹட்கேவர், 1921ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று ஓராண்டும், 1930ல் தண்டி சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தி, ஒன்பது மாதங்களும் சிறையில் இருந்தார்.

அவருடன் நுாற்றுக் கணக்கான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சிறைக்கு சென்றதை காங்., மறந்து போனது ஏன்?

'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தின் ஒரு பகுதியாக, 1942ல் மஹாராஷ்டிராவில் விதர்பா என்ற பகுதியில் அமைந்துள்ள சிமுற் என்ற இடத்தில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் தாதா நாயக், பாபு ராவ் போன்றவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தான், இந்திய சுதந்திர பேராட்டத்திற்கே ஒரு திருப்புமுனையாக இருந்தது என்பது வரலாறு.

இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் சிறை சென்றனர். அந்த அமைப்பின் தலைவர் தாதா நாயக்கிற்கு மரண தண்டனை விதித்தது பிரிட்டிஷ் அரசு.

அவ்வளவு ஏன்... 'சுதந்திரம் எனது பிறப்புரிமை' என்று முழங்கிய, ஹிந்துத்துவா சிந்தாந்தம் கொண்ட திலகரின் சீடர் தான், வ.உ.சிதம்பரம் பிள்ளை. பிரிட்டிஷாரை எதிர்த்து கப்பல் ஓட்டியதற்காக, துாத்துக்குடி சிறையில் சவுக்கடி பட்டு செக்கிழுத்தார்.

விடுதலை அடைந்ததும் பதவிக்கு ஆலாய் பறந்த காங்கிரசாரில் எவராவது வ.உ.சி.,யைப் போல செக்கிழுத்திருக்கின்றனரா அல்லது சாவர்க்கர் போல் கடுமையான தண்டனையை தான் அனுபவித்திருக்கின்றனரா?

சுதந்திர போரில் காங்., மிதவாத கொள்கையுடன் போராடியது; ஆனால், மற்றொரு தரப்போ உயிரை துச்சமென மதித்து, தங்கள் இன்னுயிரை கொடுத்து போராடினர்; கொடும் சித்ரவதைகளை அனுபவித்தனர்.

அவர்களின் தியாகம் மறைக்கப்பட்டு, ஒட்டுமொத்த பலனையும் இன்றுவரை அறுவடை செய்து வருவது நேரு குடும்பம் மட்டுமே!

நாடு, 562 சமஸ்தானங்களாக சிதறிக் கிடந்த போது, ஒவ்வொருவரிடம் பேச்சு நடத்தி, இணங்காதவர்களை மிரட்டியும் ஒன்றுபட்ட இந்தியாவாக உருவாக்கியவர், சர்தார் வல்லபாய் படேல். 50 ஆண்டுகளுக்கும் மேலான காங்., ஆட்சியில் படேல் சிறப்பு செய்யப்பட்டரா?

ஆனால், சுதந்திர போராட்டக்காலத்தில் பகத்சிங் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு பாதுகாப்பு கொடுத்ததுடன், சுதந்திரத்திற்கு பின், சர்தார் வல்லபாய் படேலின், 1௮௨ அடி உயர சிலை அமைத்து சிறப்பு செய்தது, ஆர்.எஸ்.எஸ்., வழியில் வந்த பா.ஜ., அரசு.

ஆனால், காங்கிரசாரோ, சாவர்க்கரின் விடுதலை போராட்டத்தைக் கூட, சவார்க்கர் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் என்று அவமரியாதை செய்கின்றனர்.

அதேநேரம் சிறையில் இருந்த காலத்தில், தன் வாழ்க்கை வரலாற்றை ரசித்து எழுதிய நேருவின் தண்டனை காலம் சிலாகிக்கப்படுகிறது.

இதுதானே இன்றைய பிரிவினைவாதகாங்.,கின் செயல்களாக இருக்கின்றன.

எனவே, ராகுல் தலைமையிலான காங்கிரசை முஸ்லிம் லீகோடு ஒப்பிட்டது தவறு; பாகிஸ்தான் பயங்கரவாத கும்பலோடு ஒப்பிட்டு இருக்க வேண்டும்!

மதசார்புடையவர்களாக மாறுவது ஏன்?

வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தேர்தலில் ஓட்டளிக்க வரமாட்டார் என்பதற்காக, கோவில் சொத்துகளை ஆக்கிரமிக்காதீர்கள்; அரசியல் சாசனப்படி கடவுளும் நீதிமன்றத்தில் பரிகாரம் கோரலாம்' என்று அரசியல்வாதிகளுக்கு கொட்டு வைத்துள்ளது, உயர் நீதிமன்ற மதுரை கிளை.

கரூர் மாவட்டம் வெண்ணைய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான, 507.88 ஏக்கர் அளவிலான சொத்துகளை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், கடந்த 5ம் தேதி வரை அறநிலையத் துறை மீட்டதோ வெறும், 93.64 ஏக்கர் தான்.

ஆக்கிரமிப்பாளர்களின் விபரத்தை சரிபார்த்தபோது, அதில், 27 பேர் அரசு அதிகாரிகள், 49 பேர் தொழிற்சாலை அதிபர்கள், 39 பேர் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாம்!

அரசியல் வேறுபாடுகளை மறந்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற விடாமல் அதிகாரிகளை தடுக்கின்றனர், அரசியல்வாதிகள்.

தங்களை மதசார்ப்பற்றவர்கள் என்று கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள், தங்கள் கட்சியினர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பதை வேடிக்கை பார்ப்பதில் மட்டும் மதசார்புடையவர்களாக மாறிவிடுவது எப்படி?





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us