Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ எவராலும் ஒன்றும் செய்ய முடியாது!

எவராலும் ஒன்றும் செய்ய முடியாது!

எவராலும் ஒன்றும் செய்ய முடியாது!

எவராலும் ஒன்றும் செய்ய முடியாது!

PUBLISHED ON : ஜூன் 03, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
பொ.ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமலாக்க துறை விசாரணை குறித்து, 'ஈ.டி.,க்கும் பயமில்லை, மோடிக்கும் பயமில்லை' என்று கூறியுள்ளார், துணை முதல்வர் உதயநிதி.

அமலாக்க துறை மீது பயமில்லை என்றால் உதயநிதியின் நண்பர்களான ஆகாஷ், ரத்தீஸ் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி ஒளிந்தது ஏன்?

உதயநிதி இப்படி பேசுவதால் மட்டும், தி.மு.க., வினர் ஊழல் செய்யாத உத்தமர்கள் என்று மக்கள் நம்பிவிடப் போகின்றனரா என்ன?

விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்ய தெரிந்தவர் என்று சர்க்காரியா கமிஷனால் விமர்சிக்கப்பட்ட கருணாநிதியை தலைவராக ஏற்று, அவரிடம் பாடம் படித்தவர்கள் தி.மு.க.,வினர்!

அதனால், கவனிக்க வேண்டியவர்களை கவனித்து, கணக்கை சரிசெய்து வைத்திருப்பர்!

அந்த தைரியத்தில் கூறுகிறார் உதயநிதி.

சர்க்கரை மூட்டைகள் மாயமானது தொடர்பாக சர்க்காரியா கமிஷன் அதிகாரிகள், '27,000 சர்க்கரை மூட்டைகள் எங்கே' என்று கருணாநிதியிடம் கேட்டபோது, 'எறும்பு தின்று விட்டது' என்று பதிலளித்தாராம்.

'சரி... அந்த, 27,000 காலி சாக்குகள் எங்கே?'என்று கேட்டதற்கு, அவற்றை கறையான் தின்று விட்டது என்று புத்திசாலித்தனமாக பதிலளித்தாராம்!

இதுபோன்ற திறமையான பதில்களை, இவர்கள் தயார் செய்து வைத்திருப்பர்.

ஊழல் பணத்தை, வெள்ளையாக்க ஓடாத திரைப்படம் கூட, 100 கோடி ரூபாய் லாபம் ஈட்டி தந்ததாக கணக்கு காட்டுவர். அதற்கான வரியையும் செலுத்தியிருப்பர். அப்படிச் செய்தால், ஈ.டி.,யால் என்ன செய்ய முடியும்? மோடியால் தான் என்ன செய்ய முடியும்?



மொழியோடு விளையாடும் கமல்!


கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரு வில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடிகர் கமல்ஹாசனின் அறிக்கையும், பொது நிகழ்ச்சிகளில் அவர் பேசும் பேச்சும் பாமர மக்களுக்கு புரிவது கஷ்டம். அப்படியே புரியும்படி பேசிவிட்டால், அது பெரிய சர்ச்சையை கிளப்பிவிடும்.

அப்படித்தான், தக்லைப் பாடல் விழாவில் அவர் பேசியது!

தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என்று சொல்லிவிட்டார்.

அது உண்மையாக இருந்தாலும் கூட, மொழி உணர்வு மேலோங்கி இருக்கும் இக்காலத்தில் எவரும் தம் மொழியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

உலக மொழி ஆய்வாளர்கள் சமஸ்கிருதத்தின் தொன்மை குறித்து கூடத் தான் அதிகம் பேசுகின்றனர். அதை ஏற்றுக்கொள்வாரா கமல்... அது குறித்து பேசத் தான் துணிவு இருக்கிறதா?

தமிழின் பெருமைக்கு காரணம், திருக்குறள், சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள்!

அதுகுறித்து என்றாவது உயர்வாக பேசியிருக்கிறாரா?

எல்லாம் பேசிவிட்டு, இப்போது சொல்கிறார்... 'அரசியல்வாதிகள் மொழி குறித்து பேச தகுதியற்றவர்கள்; வரலாற்று ஆய்வாளர்கள், மொழியாளர்கள் செய்ய வேண்டிய வேலை இது' என்று!

ஊழலை ஒழிக்க அவதாரம் எடுத்தது போல், தி.மு.க.,வின் விளம்பர ஒளிபரப்பை, 'டார்ச் லைட்' டால் அடித்து உடைத்தவர், இன்று அக்கட்சியின் காலடியில் கிடக்கிறார்.

இவருக்கெல்லாம் பதவியைத் தவிர வேறு என்ன குறிக்கோள் இருக்கப் போகிறது?

தனிமனித வாழ்க்கையில் ஒழுக்கமின்றி வாழ்ந்து விட்டு, வயதான பின், அரசியல் களத்தில் கம்பு சுற்றும் இவரைப் போன்றோருக்கு மக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது!



பா.ம.க.,வின் எதிர்காலம் என்ன?


ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒரு குறிப்பிட்ட ஜாதி ஓட்டுகளை நம்பி துவக்கப்பட்ட கட்சியே, பா.ம.க., என்பது நாடறிந்த உண்மை!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பான்மையாக விளங்கும் தன் சமூகத்தினரை ஒருங்கிணைத்து, ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்து அரசியல் அங்கீகாரம் பெற்று தந்தவர், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்.

அரசியலில் வாரிசுகள் தொடர்வது தமிழகத்திற்கு புதிதல்ல. அதன்படி, தன் மகன் அன்புமணியை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய ராமதாஸ், ஒரு காலகட்டத்தில் பொறுப்புகளை முழுமையாக மகன் வசம் ஒப்படைத்து ஒதுங்கி இருந்திருக்கலாம்.

அப்படி செய்திருந்தால், இப்போது, தந்தை- - மகன் மோதல் நிகழ்ந்திருக்காது.

'தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்' என்ற வள்ளுவர் வாக்குப்படி ராமதாஸ் நடந்து கொள்ளவில்லை. தற்போது, அதிகாரத்துக்காக இருவரும் மோதிக்கொண்டு, கட்சியை பலவீனப்படுத்தும் வேலையில் இறங்கிஉள்ளனர்.

ஒரு காலத்தில் மத்திய அமைச்சரவையில் பதவி வகித்து, அகில இந்திய அளவில் பெயர் எடுத்த பா.ம.க., தற்போது, உட்கட்சி போராட்டத்தால் ஆட்டம் காண துவங்கிஉள்ளது.

'ஓர் உறையில் இரு கத்திகள் இருக்க முடியாது' என்ற சாதாரண உண்மையை தந்தை - மகன் இருவரும் உணர்ந்தால் மட்டுமே, பா.ம.க.,வுக்கு இனி எதிர்காலம் உண்டு!



சபாஷ் சரியான தண்டனை!


எஸ்.கண்ணம்மா, விழுப்புரத் தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அண்ணா பல்கலை மாணவி பாலியல் புகார் வழக்கில், ஞானசேகரன் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 'நான் நோயாளி, பார்த்து தீர்ப்பு சொல்லுங்கள்' என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளார், ஞானசேகரன்.

பொதுவாக பாலியல் குற்றவாளிகள், தங்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் நீதிமன்றத்தில் அழுது புலம்புவதும், தங்களுக்கு வயதான பெற்றோர், குடும்பம், குழந்தைகள் இருப்பதாகவும், அதனால் தண்டனையை குறைக்கும்படியும் கெஞ்சுகின்றனர்.

குற்றம் புரியும்போது இவையெல்லாம் நினைவுக்கு வரவில்லையா? தண்டனை வழங்கப்படும் போது தான் நினைவுக்கு வருமா?

அரபு நாடுகளில் பாலி யல் குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் துாக்கு தண்டனை நிறைவேற்றுகின்றனர். அதனால், அங்கு பாலியல் குற்றங்கள் குறைவு!

நம் நாட்டிலும் மன்னர்கள் ஆட்சி காலத்தில் குற்ற வாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்பதே அரச நீதி. அதனால், அன்று குற்றங்கள் குறைவாக இருந்தன. மக்களும் பாதுகாப்பாக இருந்தனர்.

ஆனால், இன்று மக்களாட்சியில் பெருங்குற்றங்களை கூட சாதாரணமாக செய்து விட்டு சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பி விடுகின்றனர். பின், அதே தவறை மீண்டும் செய்கின்றனர். இதனால், நாட்டில் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.

இந்நிலையில், ஞான சேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.

மேலும், குறைந்தது, 30 ஆண்டுகள், எந்த தண்டனை குறைப்பும் இன்றி அனுபவித்தே ஆக வேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளதும் வரவேற்கத்தக்கதே!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us