PUBLISHED ON : ஜூன் 13, 2025 12:00 AM

என்.மல்லிகை மன்னன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த சட்டசபை தேர்தலில் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளை விட, வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை கேட்போம்' என்று கூறியுள்ளார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் சண்முகம்.
இருக்க இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்டதுபோல் இருக்கிறது சண்முகத்தின் பேச்சு!
'நாங்களும் தி.மு.க.,விடம் அதிகமான தொகுதிகளை கேட்கத் தயங்க மாட்டோம்' என்கிறார் திருமாவளவன்.
ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியும் அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 'தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும்' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தன் பங்குக்கு குண்டை துாக்கிப் போட்டு விட்டு சென்று விட்டார்.
ஆனால், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி நடந்ததாக வரலாறு இல்லை. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், ஒருசமயம், சட்டசபை தேர்தலில் வென்ற தி.மு.க.,விற்கு ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிட்டி கிடைக்காமல், காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. அந்த நிலையிலும் கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதி சம்மதிக்கவில்லை.
அதே நிலைப்பாட்டுடன் தான் ஸ்டாலினும் இருப்பார்.
அத்துடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழகத்தில் ஓட்டு இருக்கிறதா என்ன... அதிக தொகுதிகளில் போட்டியிட!
இதுவரை, அ.தி.மு.க., - தி.மு.க., என இரு பெரிய கட்சிகளின் தயவால் மட்டுமே, ஒன்றிரண்டு இடங்களில் வென்றுள்ளது. தனித்து நின்றால் டிபாசிட் கூட கிடைக்காது என்பதை சண்முகம் மறந்து விட்டாரா?
இருப்பதை விட்டு, பறப்பதை பிடிக்க துடித்தால், இருப்பதும் இல்லாமல் போய்விடும்.
எனவே, சண்முகம் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது!
அரசு பள்ளிகளின் தரம் உயர...
அ.குணசேகரன்,
வழக்கறிஞர், புவனகிரியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழகத்தில், 37,554 அரசு பள்ளிகள் இருப்பதாகவும், இங்கு, 52,75,203 பேர்
படிப்பதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில் தனியார் ஆங்கிலப்
பள்ளிகள், 12,000 உள்ளன என்றும், அவைகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களை விட, நான்கு லட்சம் பேர் அதிகம் படிப்பதாகவும் கூறுகின்றனர்.
அரசு
பள்ளி எண்ணிக்கையில் மூன்றில் ஒரு சதவீதம் மட்டுமே தனியார் பள்ளிகள்
உள்ளன. ஆனாலும், மக்கள் தனியார் பள்ளிகளை நாடக் காரணம், அரசு பள்ளிகளில்
போதுமான ஆசிரியர்கள் இல்லை. கழிப்பறைகள், விளையாட்டு மைதானங்கள், அறிவியல்
ஆய்வு கூடங்கள், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் இருப்பதில்லை.
இதுபோன்ற
பல காரணங்களால், அரசுப் பள்ளிகள் பலவற்றில் தற்போது போதிய மாணவர்கள்
இல்லாமல், ஒவ்வொரு ஆண்டும் சில பள்ளிகள் இழுத்து மூடப்படுகின்றன.
தமிழக
அரசு எத்தனையோ சலுகைகளை வாரி வழங்கிறது. உதாரணத்திற்கு, அரசு பள்ளிகளில்
ஆறு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கு, அரசு வேலை வாய்ப்பில், 20 சதவீதம்
முன்னுரிமை. அரசு பள்ளியில் படித்து முடித்து, பட்டப் படிப்பு படிக்கும்
மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் மற்றும் மருத்துவம், தொழிற்கல்வி,
பட்டயப் படிப்புக்கு, 7.5 சதவீதம் ஒதுக்கீடு போன்ற சலுகைகளை வழங்கி
வருகிறது.
அத்துடன், தமிழக கல்வித் துறை தற்போது, எல்.கே.ஜி., வகுப்புகளையும் துவக்கிஉள்ளது.
அப்படியும்,
மாணவர் சேர்க்கை அதிகரிக்காததற்கு மற்றொரு காரணம், அரசுப்பள்ளி
ஆசிரியர்களில், 99 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில்
சேர்ப்பது இல்லை. ஆசிரியர்களுக்கே தங்கள் கற்பித்தலில் நம்பிக்கை இல்லாத
போது, பாமர மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்?
இதன் காரணமாகவே, ஏழை - எளியவர்கள் கூட கடன் வாங்கியாவது தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.
இந்நிலையில்,
செங்கல்பட்டு மாவட்ட ஆலந்துார் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி
முருகேசன், திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தன் மகளை
எல்.கே.ஜி., வகுப்பில் சேர்த்துள்ளார்.
இதுபோன்று அரசு அதிகாரிகள்
தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்த்தால், ஆசிரியர்களும்
சிறப்பாக கற்றுக் கொடுப்பர்; அதைப் பார்த்து, அப்பகுதி மக்களும் தங்கள்
குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க ஆரம்பிப்பர்.
அப்போது, தானாகவே அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து விடும் அல்லவா?
அரசு ஊழியர்கள் யோசிக்க வேண்டும்!
கணக்கு காட்டுவாரா டி.ஆர்.பாலு?
ஆர்.சந்துரு,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'உலக அளவில் நம்
நாட்டு ராணுவம் பலமானது என்பதை பாகிஸ்தான் மீதான நடவடிக்கை வாயிலாக
மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளோம் என, ராணுவ தளபதி கூறுகிறார். அவர்
கூறியதை அப்படியே ஏற்கிறோம். ஆனால், பாகிஸ்தான் மீதான நடவடிக்கையால் நம்
நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புகளை தெரிவிக்க வேண்டாமா? அதை அரசு விரும்பவில்லை
என்றால், ராணுவ நடவடிக்கை மீது சந்தேகம் தானே வரும்' எனக் கேட்டுள்ளார்,
தி.மு.க., பொருளாளர் டி.ஆர்.பாலு.
நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில்,
இழப்பீடுகளுக்கான கணக்கு கேட்கும் டி.ஆர்.பாலு, தி.மு.க., தலைவர் கருணாநிதி
உயிருடன் இருந்தபோதும், தற்போதும் பிறந்த நாள் நிதி என்று தொண்டர்களிடம்
நோட்டு மாலையாக கழகம் பெறுகிறதே... அதற்கு எப்போதாவது கணக்கு
காட்டியுள்ளதா?
கப்பல் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது,
சேது சமுத்திர திட்டம் என்ற பெயரில், 1,000 கோடி ரூபாயை ஏப்பம் விட்டதற்கு,
நாட்டு மக்களுக்கு டி.ஆர்.பாலு கணக்கு காட்டி உள்ளாரா?
இவை
எல்லாவற்றையும் விட, தற்போது டாஸ்மாக் மதுபான கடைகளில் பாட்டிலுக்கு
கூடுதலாக, 10 ரூபாய் வசூலிக்கின்றனரே... அதற்கு எத்தனை முறை கணக்கு
காட்டியுள்ளது திராவிட மாடல் அரசு?
சரி... நம் நாட்டிற்கு ஏற்பட்ட
இழப்புகள் என்னவென்று பட்டியலிட்டு கூறிவிட்டால், கழக அறக்கட்டளைகளில்
கணக்கில்லாமல் குவிந்து கிடக்கும் பணத்தை, ராணுவ நிவாரணத்துக்கு என்று
நிதியை அள்ளிக் கொடுத்துவிடப் போகிறாரா பாலு?
'கைப்புண்ணுக்கு மருந்து தர மனமில்லாதவன், ஏரோபிளேனை இலவசமாக தருவேன்'னு சொன்னானாம்... அதுபோல், எதற்கு இந்த வெற்று பேச்சு?