PUBLISHED ON : மார் 27, 2025 12:00 AM

கோ.பாண்டியன், காவல் துணை கண்காணிப்பாளர் (பணி நிறைவு), செங்கல்பட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: -அரசு நிர்வாகத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்ல உறுதுணையாக இருப்பவை, நாளிதழ்கள்!
பத்திரிகைகள், செய்திகளை மட்டுமல்ல; மக்களின் தேவைகள், குறைகளை அரசுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு துாதுவராகவும் திகழ்கின்றன.
அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பொதுமக்கள் அணுக முடியாத நிலையில், அவர்களது குறைகளை உரியவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் வாயிலாக, கணக்கிலடங்கா பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தினந்தோறும் அதிகாலையிலேயே அனைத்து பத்திரிகைகளையும் படித்து, செய்திகளுக்கு ஏற்ப, அதிகாரிகளுக்கு உத்தரவு போடுவது வழக்கம்.
அதேபோன்று, அக்காலத்தில் மக்கள் பிரச்னைகளை செய்தித்தாள்களில் அதிகாரிகள் படித்து விட்டால், அதை தீர்த்து வைக்கும் வரை ஓயமாட்டார்கள். பத்திரிகை செய்திகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர்.
ஆனால், இன்றோ அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் அன்றாடம் மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்கின்றன; செவிடர் காதில் ஊதிய சங்காய், அரசு அதிகாரிகள் ஏதோவொரு, 'எதிர்பார்ப்பு' காரணமாக கண்டுகொள்வதில்லை.
ஒருசில நல்ல அதிகாரிகள் இருக்கின்றனர் தான்; என்ன... அவர்களை பூதக் கண்ணாடி போட்டு தேட வேண்டி உள்ளது!
செய்திகள் என்பது ஆட்சியின் அழகை பிரதிபலிக்கும் கண்ணாடி. இது புரியாமல், மக்களின் மனுக்களை அலட்சியம் செய்வது போல், பத்திரிகை வாயிலாக வரும் மக்கள் பிரச்னைகளையும் அலட்சியம் செய்வதால், பொதுமக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிறது.
இன்றைக்கு, நீதிமன்றங்களில் அரசின் மீது அதிகமான வழக்குகள் தொடரப்படுவதற்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுக்கள் குவிவதற்கும், அரசு அலுவலர்களின் மெத்தனப் போக்கே காரணம்!
சாட்டையைச் சுழற்றி வேலை வாங்கும் உயர் அதிகாரிகள் கூட, 'நமக்கேன் வம்பு; பிரச்னை இல்லாமல் காலத்தை ஓட்டுவோம்' என்ற மனப்பான்மையுடன் வேலை பார்க்கின்றனர்.
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குங் தகைமை யவர்!
- என்கிறார் வள்ளுவர்.
'இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல், எவருக்கும் இல்லை' என்று உரை எழுதியுள்ளார், கருணாநிதி.
ஆனால், மக்கள் பிரச்னைகளை பத்திரிகைகள் எடுத்துரைத்தும் அரசு, அதை அலட்சியம் செய்கிறது. இது ஆட்சி மாற்றத்திற்கே வழிகோலும் என்பதை ஆளும் அரசு மறந்துவிடக் கூடாது.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாதது ஏன்?
இ.முனுசாமி,
திருவள்ளூரில்இருந்து எழுதுகிறார்: தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் பணி
செய்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள், 90,000 பேருக்கு, 2015 முதல்
அகவிலைப்படி வழங்காமல் வஞ்சிக்கிறது, தமிழக அரசு.
ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக பணியாளர்கள் மீது தமிழக முதல்வருக்கு அப்படி என்ன கோபம்?
அகவிலைப்படி
கொடுப்பதாக தேர்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள்
ஆகியும், அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் மவுனம் சாதிப்பது ஏன்?
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று மனசாட்சி உறுத்தவில்லையா?
நீதிமன்றம்
அகவிலைப்படி வழங்க தீர்ப்பு அளித்தும், அதை நிறைவேற்ற மனம் இல்லாமல்
மேல்முறையீடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என, காலதாமதம் செய்கிறது தமிழக
அரசு.
உச்ச நீதிமன்றம் தமிழகஅரசின் வழக்கை தள்ளுபடி செய்து,
அகவிலைப்படி கொடுக்க தீர்ப்பு சொல்லியும், சீராய்வு மனு தாக்கல் செய்கிறது.
இது தான், திராவிட மாடல் அரசு, பணி ஓய்வு பெற்ற முதியோர்களுக்கு செய்யும்
உதவியா?
இந்த, 9 ஆண்டுகளில், 12,000 தொழிலாளர்கள் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை ஆயிரம் தொழிலாளர்கள் இறந்த பின் கொடுக்கப் போகிறீர்கள்?
'நீட்'
தேர்வுக்கும், ரம்மி சூதாட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து, 'ரத்து
செய்ய வேண்டும், தடை செய்ய வேண்டும்' என, கவர்னருக்கு கோப்பை சமர்ப்பித்து,
அவர் கையொப்பம் போடாமல் கால தாமதம் செய்தபோது, 'இன்னும் எத்தனை பேர் இறந்த
பின் கையொப்பம் போடுவீர்கள்?' என்று அவரைக் கேட்ட முதல்வருக்கு, 12,000
தொழிலாளர்கள் இறந்துள்ளனரே... அவர்களுக்காக மனம் இரங்கவில்லையா?
மின்சார
வாரியமும் நஷ்டத்தில் தான் இயங்குகிறது. அதற்கு நஷ்ட ஈட்டுடன், மானியமும்
கொடுத்து உதவி செய்யும் தி.மு.க., அரசு, போக்குவரத்து ஊழியர்களுக்கு
மட்டும் அகவிலைப்படியை கொடுக்காமல் இழுத்தடிப்பது ஏன்? இதுதான்
தொழிலாளர்களுக்கு தாங்கள் செய்யும் நீதியா?
மாற்றான் தாய் பிள்ளைகளா போக்குவரத்து கழக ஊழியர்கள்?
கற்பாறையிலும் ஈரம் உண்டு என்பர். அதை விட கல்லாகப் போய் விட்டதா முதல்வரின் மனம்?
குற்றங்கள் குறைவது எப்படி?
மா.சண்முகசுந்தரம்,
திருநெல்வேலியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில் ஒரே
நாளில் நான்கு கொலைகளும், இரண்டு மர்ம மரணங்களும் நடந்துள்ளன. பொதுமக்களை
பாதுகாக்க வேண்டிய காவலர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலினோ, வழக்கம் போல், 'நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சொல்லி, தன் பொறுப்பில் இருந்து கழன்று கொள்கிறார்.
குற்றங்களை தடுக்க அப்படி என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்?
கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொடூர குற்றங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதற்கெல்லாம்
காரணம், ஆளும் அரசு தான் என்று குற்றஞ்சாட்ட முடியாவிட்டாலும், குற்றங்களை
தடுக்க வேண்டிய பொறுப்பு அரசிடம் தானே உள்ளது?
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் தானே, மாநிலத்தில் நிகழும் இக்குற்ற சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டும்?
அதை
தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்காமல், எதிர்க்கட்சிகள்
குற்றஞ்சாட்டினால், 'கடந்த ஆட்சியில் இப்படி நிகழ்ந்தது, அந்த மாநிலத்தில்
அப்படி நிகழ்ந்தது' என்று கதை கூறிக் கொண்டிருக்கிறார்.
ஆண்டிற்கு, 70 முதல் 80 வரை கொலைகளும், படுகொலைகளும், பாலியல் குற்றங்களும் நடந்தேறி இருக்கிறது.
இதில்
பலவற்றில், ஆளும் அரசும், காவல்துறை அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து
உண்மைகளை மறைத்து, விசாரணையை கேலிக்கூத்தாக்கி, குற்றவாளிகள்
விடுதலையாவதும் நடந்தேறுகிறது.
அத்துடன், பல வழக்குகளில்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலேயே விடுபட்டு போயிருக்கிறது அல்லது
விடுபட்டு போக அனைத்து முயற்சிகளையும் ஆளும் அரசும், காவல்துறை
அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நடத்துகின்றனர்.
உண்மை இவ்வாறு இருக்க, எப்படி குற்றங்கள் குறையும், சட்டம் - ஒழுங்கு சீராகும்?