Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ ஆஹா... இதுவல்லவோ நிர்வாகம்!

ஆஹா... இதுவல்லவோ நிர்வாகம்!

ஆஹா... இதுவல்லவோ நிர்வாகம்!

ஆஹா... இதுவல்லவோ நிர்வாகம்!

PUBLISHED ON : ஜூலை 31, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையிலிருந்துஅனுப்பிய 'இ-மெயில்' கடிதம்: 'சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தது' போல, 'கொலைக்குற்றங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும்; அந்த குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்கின்றனரா என்பதுதான் முக்கியம். தமிழகத்தில் அனைத்து குற்றங்களுக்கும் நடவடிக்கை எடுத்துக்கொண்டே தான் இருக்கின்றனர்' என திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் செய்தியாளர்களிடம் பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு.

நல்லவேளை, 'திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி, லஞ்சம், ஊழல், முறைகேடு, நில அபகரிப்பு ஆகியவை நடந்து கொண்டே தான் இருக்கும். நடவடிக்கை எடுக்கின்றனர்' என்று சொல்லாமல் விட்டார்.

ராமஜெயம் யார்? அமைச்சர் நேருவின் தம்பி தானே?

கடந்த 2011ல், ராமஜெயம் திருச்சியில் அதிகாலை நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார். சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகின்றன. கொலையாளியை கண்டுபிடித்து விட்டீர்களா?

தா.கிருஷ்ணன் யார்? கழக கண்மணிகளில் ஒருவர் தானே? மதுரையில் அதிகாலை வேளையில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது முடித்து வைக்கப்பட்டார். தா.கிருஷ்ணனை கொன்றவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிப்பாட்டி விட்டீர்களா?

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் வாழ்ந்து வந்த அ.தி.மு.க., பிரமுகர் ஜெ.பாலனும் மெரினா கடற்கரை பகுதியில் வைத்து தான், கொலையுண்டார். 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. கொலையாளிகளின் கைகளில் காப்பு மாட்டி விட்டீர்களா?

திராவிட மாடல் ஆட்சி அமைந்து மூன்று ஆண்டுகளில் ஐநுாற்று சொச்சம் கொலைகள் நடந்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறிக் கொண்டிருக்கிறார். அந்த ஐநுாற்று சொச்சம் கொலைகளை நடத்தி முடித்த குற்றவாளிகளில், எத்தனை பேரை, காவல்துறை கைது செய்துள்ளது?

சமீப சில நாட்களாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பரபரப்பாக ஓடுகிறது. இன்னும் துப்பை துலக்குறாங்க... துலக்குறாங்க... இன்னும் கண்டுபிடித்தபாடில்லை!

இதுவல்லவோ நிர்வாகம்!

இந்த நிர்வாகத்திற்காகத் தானே தமிழக மக்கள் மாய்ந்து மாய்ந்து ஓட்டளித்து அரியணையில் அமர வைத்திருக்கின்றனர்; வாழ்க தமிழகம்!

புல்டோசர் கலாசாரத்தை வரவேற்கலாம்!


எஸ்.செபஸ்டின், சிவகாசியில் இருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில், 'உ.பி.,யில் நடக்கும் புல்டோசர் நடவடிக்கையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்' என்று பேசியிருந்தார். ஆனால், அப்போது அவர் பேசியது சற்று திகைப்பாக இருந்தது.

ஒரு நாட்டின் பிரதமரே, இதுபோன்ற அதிரடியான எதிரான நடவடிக்கைக்கு ஆதரவாக பேசுவது போன்று தோன்றியது. ஆனால், நம் பிரதமர் கூறியது சரியே என்பதை, தற்போது தமிழகத்தில் தினமும் நடக்கும் கொலை, கொள்ளை சம்பவங்கள் உணர்த்துகின்றன.

இவற்றுக்கு சரியான தீர்வு தேடுவதுடன், ரவுடிகளின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், அவர்களது பொருளாதாரத்தை முதலில் முடக்க வேண்டும். எனவே, அவர்களது பணத்தையும், அசையும் சொத்துகளையும் பறிமுதல் செய்ய வேண்டும்.

அவர்கள் சட்டவிரோதமாக சம்பாதித்த கட்டடங்கள் அனைத்தையும் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்க, தமிழக முதல்வர் ஸ்டாலினும் நடவடிக்கை எடுக்கப் போவதாக நாளிதழ்களில் செய்தி வந்தது.

இது மாதிரியான நடவடிக்கைகளை இருகரம் கூப்பி வரவேற்கலாம்.தமிழகத்தில் முதலில் போதைப் பொருள் விற்பனையை முழுதுமாக தடை செய்ய வேண்டும். போதை பொருள் உபயோகிப்போர் தான் கடுங்குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே, போதைப் பொருள் விற்பனை செய்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அவர்களது ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கி, அவர்களின் அசையும் சொத்துக்களை அரசுடைமையாக்க வேண்டும்.

அடுத்து, அவர்களின் அசையா சொத்துக்களான கட்டடங்களை, குடியிருப்புகளை புல்டோசர் கொண்டு இடித்து, மண்ணோடு மண்ணாக்க வேண்டும்.அப்படி செய்தால் மட்டுமே போதைப் பொருள் விற்பனை செய்பவர்களும், கொலை, கொள்ளை செய்வோரும் அடங்குவர். அப்போது தான், தமிழகத்தில் சாதாரண மக்கள் நிம்மதியாக வாழ முடியும். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ முதல்வர் ஸ்டாலின், சாட்டையை சுழற்ற வேண்டும்.



மந்திரியின் மன்னிக்க முடியாத குற்றம்!


முனைவர், மீனாட்சி பட்டாபிராமன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ராமன் ஆட்சியின் நீட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. ராமன், ஸ்டாலினின் முன்னோடி' என பெருமிதப்பட்டுள்ளார், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. இது அவருடைய தவறில்லை. அவரை பேசுவதற்கு அழைத்த புதுக்கோட்டை கம்பன் கழக நிர்வாகத்தாரின் தவறு.

ராமாயணத்தைப் பற்றியோ, ஸ்ரீராமனைப் பற்றியோ ஒன்றும் தெரியாத ஒருவரை, அவர் அமைச்சர் என்பதற்காகவே இந்த மாதிரி விழாக்களுக்கு அழைப்பது நடைமுறையாகி விட்டது; இதற்கு, புதுக்கோட்டை கம்பன் கழகமும் விதிவிலக்கல்ல.

சட்டம் படித்துள்ள ரகுபதிக்கு இப்படி அபத்தமாக ஒப்பீடு செய்கிறோமே என்பது நன்றாகவே தெரியும். ஆனாலும், தலைமையை ஐஸ் வைக்கவே இப்படி எல்லாம் பேசியுள்ளார்.

'அக்மார்க்' ஆரியரான ராமனை திராவிடன் என்று பேசிய அமைச்சரை கம்பனுக்கு கழகம் எல்லாம் வைத்து விழா எடுக்கும் கூட்டம் கண்டுகொள்ளாமல் விட்டது கொடுமை. கம்பனை கற்றவர் பலர் நாட்டில் உள்ளனர். அவர்களை அழைக்காமல், ஆடம்பரத்திற்காக விஷயம் தெரியாத ஆட்சியாளர்களை அழைத்து வந்து ராமரை பற்றி பேச சொன்னால் இப்படித்தான் நடக்கும்.

தனது 16 நற்குணங்கள் கொண்டு ராமராஜ்ஜியம் தந்த ஸ்ரீராமானுடன், கள்ளச்சாராயத்துக்கு பலரை பறிகொடுத்து மதுக்கடையால் கல்லா கட்டும் கடவுள் மறுப்பாளரை ஒப்பிட்டுள்ளது, பல கோடி ஹிந்துக்கள் மனதை காயப்படுத்திஉள்ளது.

எது எப்படியோ,ரகுபதி அவர்களே... கம்பன் மட்டும் இன்று இருந்திருந்தால் உங்களை மட்டும் அல்ல, உங்களை பேச கூப்பிட்ட கம்பன் கழகத்தாரையும் மன்னித்திருக்க மாட்டார். உங்களுக்கு ராமாயணமும் தெரியவில்லை, திராவிடமும் தெரியவில்லை என்பது நிரூபணமாகிஉள்ளது.

நடையில் நின்றுயர் நாயகன் எங்கள் ஸ்ரீராமன். அவனை மதுக்கடை வருமானத்தில் ராஜ்ஜியம் நடத்தும் ஒருவரோடு ஒப்பிட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us