Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/இது உங்கள் இடம்/ நல்லாட்சியா இது கமல்?

நல்லாட்சியா இது கமல்?

நல்லாட்சியா இது கமல்?

நல்லாட்சியா இது கமல்?

PUBLISHED ON : ஜூன் 18, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
பொ. ஜெயராஜ், பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதற்கு, ஸ்டாலின் செய்த நல்லாட்சியே காரணம்' என்றிருக்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்.

அப்படியென்றால்...

* லஞ்சம், ஊழலை ஒழித்து விட்டாரா?

* பூரண மதுவிலக்கை அமல்படுத்தி விட்டாரா?

* போதைப் பொருட்கள் விற்பனையை தடுத்து விட்டாரா?

* ஓட்டை உடைசல் பேருந்துகளை ஓரம் கட்டிவிட்டு, தரமான, புதிய பேருந்துகளை இயக்குகிறாரா?

* கனிமவள கொள்ளையை தடுத்து விட்டாரா?

* வாரிசு அரசியலை ஒழித்து விட்டாரா?

* மக்களை சோம்பேறிகளாக்குவதுடன், ஓட்டுகள் வாங்க மட்டுமே பயன்படும் இலவச திட்டங்களை ஒழித்து விட்டாரா?

* தமிழகத்தின் கடன் சுமையை கரைத்து விட்டாரா?

* வீணாக கடலில் கலக்கும் மழைநீரை சேமிக்க அணைகள் பல கட்டினாரா?

* ஏரி, குளங்களை எல்லாம் துார்வாரினாரா? ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டாரா?

*ஹிந்துக்களின் மனதை புண்படுத்திய உதயநிதி, ஆ.ராஜா போன்றவர்களை கண்டித்தாரா, தண்டித்தாரா?

* எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டங்கள் , மருத்துவமனை கட்டடங்கள், அரசு அலுவலக கட்டடங்களை இடித்து விட்டு புதிய கட்டடங்கள் கட்டிக் கொடுத்து விட்டாரா?

*கல்வி வியாபாரத்தை தடுத்து விட்டாரா?

*ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளைக்கு முடிவு கட்டினாரா?

எதை அடிப்படையாக வைத்து இந்த ஆட்சியை நல்லாட்சி என்று கமல் கூறுகிறார்?

ஸ்டாலின் செய்ததெல்லாம்...

* கடந்த 3 ஆண்டுகளில் கருணாநிதிக்கு சிலைகள் வைத்துள்ளார்

* கருணாநிதி சமாதியை 40 கோடி செலவில் புதுப்பித்தார்

* சில இலவச திட்டங்களை அமல்படுத்தினார். திட்டங்களுக்கும், கட்டடங்களுக்கும் கருணாநிதி பெயரை சூட்டினார்

*7 இந்திய மாநிலங்களில், தமிழகத்தை கடன்சுமையில் முதலிடத்திற்கு கொண்டு வந்தார்.

இதுவா நல்லாட்சி? சொல்லுங்கள் கமல்!



சாமானியர்களை கவனியுங்கள் நிர்மலா மேடம்!


ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய அரசு, பட்ஜெட் தயாரிப்புப் பணியைத் துவக்கி உள்ளது.

சாமானிய மக்களின், 10 ஆண்டு கால கோரிக்கையான பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சூடம் மற்றும் உணவுப் பொருட்களின் வரி குறைப்பு, விவசாய உரம் உள்ளிட்டவற்றின் வரி குறைப்பு என, சற்றே அவர் கருணை காட்ட வேண்டும்.

நீண்ட காலமாக உள்ள டோல்கேட்களைக் கணக்கெடுத்து, தேவையானவற்றை மட்டும் செயல்படுத்தலாம். மனிதனுக்கு கேடு தரும் மது, சிகரெட் ஆகியவற்றின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன், 'வெங்காய விலை கடுமையாக உயர்ந்துவிட்டதே...' என, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டபோது, 'நான் வெங்காயமே சாப்பிடுவதில்லை' என, தெனாவெட்டாக பதில் கூறினார்.

சில மாதங்களுக்கு முன் தமிழ்நாட்டிற்கு வந்தபோது அவரிடம், 'சமையல் காஸ் விலை உயர்ந்து விட்டதே...' என பெண்கள் கேள்வி கேட்டனர். 'வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதால் விலையைக் குறைக்க முடியாது' என்றார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

இது போன்று சாமானிய மக்களை ஏமாற்றும் பதில்களைச் சொல்லாமல், நிஜமான கரிசனத்துடன் பட்ஜெட் தயாரிப்பது நல்லது.



8,500 ரூபாய் வேண்டாம் என்று அர்த்தம்!


எஸ்.மணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நான்கு மாதங்களாக உணவுப் பொருட்களின் விலைவாசி 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது. பருப்பு வகைகளின் விலைவாசி ஓராண்டாக 10 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நெருக்கடிக்கு பிரதமரிடம் தீர்வு இல்லை' என, அங்கலாய்த்துள்ளார் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ்.

இவர் வாயிலிருந்து விழும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் 'அக்மார்க்' முத்திரையிட்ட உண்மைகளே அன்றி நுாற்றுக்கு இருநுாறு சதவீதம் பொய் கலக்காதவை.

அதற்காக, முதற்கண் நன்றி தெரிவிப்போம்.

நான்கு மாதங்களாகத் தான் உணவுப் பொருட்களின் விலைவாசி 8.5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுவரை பிரதமர் மோடியின் தலைமையில் அமைந்த மத்திய பா.ஜ., அரசு, உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் தான் வைத்திருந்தது.

அதுபோல, பருப்பு வகைகளின் விலைவாசி ஓராண்டாகத் தான் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு வரை பருப்பு வகைகளின் விலையும் ஏழை எளியவர்களும் வாங்கும்படி சாதாரணமாகத்தான் இருந்துள்ளது. அப்படித் தானே?

காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில், அரிசி கிலோ 2 ரூபாய், கோதுமை கிலோ 2 ரூபாய், பருப்பு வகைகள் ஒவ்வொன்றும் தலா கிலோ 5 ஐந்து ரூபாய், எண்ணெய் வகைகள் ஒவ்வொன்றும் கிலோ 4 ரூபாய், சர்க்கரை கிலோ ஒரு ரூபாய் என்ற அளவில் தானே நாட்டு மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தது?

லால் பஹதுார் சாஸ்திரிகாலத்தில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறையின்போது, திங்கட்கிழமை தோறும் உபவாசம் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டது.

அந்த தருணத்தில், பீஹாரில் இருந்து ஒரு மஹானுபாவர், ஜெகன்னாத் மிஸ்ரா என்று திருநாமம் கொண்டவர், பஞ்சத்தை சமாளிக்க, மக்கள் எலிக்கறி உண்ணும்படி ஆலோசனை வழங்கினார்.

யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொள்வது போல, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை, அந்த அளவுக்கும் மலிவாக, கட்டுக்குள் வைத்திருந்த காங்கிரஸ் ஆட்சியை அகற்றி, பா.ஜ., கட்சியை ஆட்சியில் அமர்த்தியது யாருடைய தவறு?

மக்களாகிய நம் தவறு தானே?

தவறு இழைத்தற்கான தண்டனையை அனுபவித்துத் தானே ஆக வேண்டும்?

சரி. சமீபத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலின் போது, பெண்களுக்கு பிரதி மாதம் ஒன்றாம் தேதியன்று அவர்களது வங்கிக் கணக்குகளில் 8,500 ரூபாய் வந்து விழும் என்று சொன்னவர், காங்., ராகுலாயிற்றே! அவருக்கு ஓட்டு போட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கலாமே! நடந்ததா?

ஏனெனில், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ள மோடி மீதான நம்பிக்கையால்; 8,500 ரூபாய் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டபடியால்!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us