PUBLISHED ON : ஜூன் 28, 2024 12:00 AM

ருக்மணி தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரள மாநிலத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபையில் நடைபெற்ற பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் மனோ தங்கராஜ், சமீபத்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் தொடர்பாக பேச முயன்றுள்ளார்.
அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு, 'அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். சபையில், பொதுக்கூட்டத்தில் பேசுவது போல அரசியல் பேசக்கூடாது. சபைக்கு என்று நாகரிகம் உள்ளது. வேண்டுமானால், அரசின் சாதனைகள், முதல்வரின் அருமை பெருமைகளை பற்றி பேசுங்கள்' என்று அறிவுரை வழங்கினார்.
சபையில் அரசியல் பேசக்கூடாது என்று அறிவுரை கூறிய சபாநாயகரின் செயலை வரவேற்கிறேன். அதே நேரம், மக்கள் வரிப்பணத்தில் பல கோடிகளை செலவு செய்து தேர்தல் நடத்தி, சட்டசபை உறுப்பினர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு சம்பளம் மற்றும் சலுகை என்று மேலும் பல கோடிகளை செலவு செய்து, சபைக்கு அனுப்பி வைப்பது, மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து அவற்றைத் தீர்க்கவும், மக்கள் நலனுக்கான திட்டங்களை தீட்டவும், சட்டங்களை இயற்றுவதற்காகவும் தான்.
ஆனால், மக்களுக்கு 100 சதவீதம் திருப்தி அளிக்கும் விதத்தில் அவர்களின் செயல்பாடுகள் இல்லை.
உதாரணமாக, அவர்கள் தொகுதியில் நடக்கும் மணல் கடத்தலைத் தடுக்கவோ, கள்ளச்சாராயம் விற்பதை தடுக்கவோ, ஊழலில்லாமல் தரமான சாலைகள் அமைத்து தரவோ, போதுமான எண்ணிக்கையில், தரமான பேருந்துகளை இயக்கவோ அவர்களால் முடிவதில்லை.
பல எம்.எல்.ஏ.,க்கள், சபையில் பேசுவதே கிடையாது. அவர்களுக்கு, ஆட்சியையும், முதல்வரையும் மற்றவர்கள் புகழும்போது மேஜையை தட்ட மட்டுமே தெரியும். எம்.எல்.ஏ., நினைத்திருந்தால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பதை தடுத்திருக்கவும் முடியும்; 63 உயிர்களை காவு கொடுக்காமல் தடுத்திருக்கவும் முடியும், ஆனால், செய்யவில்லையே?
சட்டசபை உறுப்பினர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கிறது என்பது, சபாநாயகருக்கு தெரியாத விஷயமல்ல. அப்படியிருக்கும்போது, அமைச்சர் மற்றும் உறுப்பினர்களிடம், 'மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுங்கள்' என்று அறிவுரை கூறாமல், 'ஆட்சியையும், முதல்வரையும் புகழ்ந்து பேசுங்கள்' என்று சபாநாயகரே அறிவுரை கூறுவது சரிதானா? சபாநாயகர் அப்பாவு வாத்தியார், இப்படி தப்பாக போதிக்கலாமா?
கமல் உளறலுக்கு எல்லையே இல்லையா?
எஸ்.கண்ணம்மா,
விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சாராய வியாபாரம்
செய்யும் எந்த அரசாக இருந்தாலும், அதில் இருந்து வரும் வருமானத்தின் ஒரு
பகுதியை கண்டிப்பாக இதற்கு ஒதுக்கி, மனோதத்துவ ரீதியாக மக்களுக்கு பாடம்
எடுக்க வேண்டும். சாலையில் விபத்து நடப்பதற்காக, போக்குவரத்தை நிறுத்த
முடியாது. வாகன வேகத்தையும் குறைக்கவும் முடியாது.
பல அதிபர்கள்,
நிறைய ஆலைகளில் பெரிய அளவில் மது தயாரிக்கின்றனர். அதற்கு கடைகளும்
வைத்திருக்கின்றனர். 'ஒரு தெருவில், மருந்து கடைகளை விட டாஸ்மாக் கடைகள்
அதிகமாக உள்ளன' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கூறியிருக்கிறார்.
என்னே
அருமையான தீர்வு உங்களுடையது கமல்! இப்படிப்பட்ட 'அறிவார்ந்த' தீர்வுகளைச்
சொல்லும் நீங்கள், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள்.
சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளும், கள்ளச்சாராயம் குடித்து ஏற்படும் உயிரிழப்புகளும் ஒன்றா?
'அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க, உங்கள் மீது அக்கறையில்லாமல் மது
விற்பனை செய்வர்; மக்களாகிய நீங்கள் தான் பார்த்து சூதானமாக நடந்து கொள்ள
வேண்டும்' என்று சொல்கிறீர்களா?
கள்ளக்குறிச்சியில்
மக்கள்,கள்ளச்சந்தையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தனர். அவர்கள்
சாராயம் குடிக்கும் முன்பே, 'மிதமாக குடியுங்கள்' என்று அறிவுரை கூறச்
சொல்கிறீர்களா?
உங்கள் கூட்டணிக் கட்சியின் எம்.பி., கனிமொழி,
சென்ற அ.தி.மு.க., ஆட்சியில், 'இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இளம்
விதவைகள் அதிகமாக உள்ளனர். காரணம் டாஸ்மாக்' என்று கூறினார். இப்போது, 63
விதவைகளை உருவாக்கிய இவர் கட்சியைச் சார்ந்த அரசை, இவர் என்ன சொல்வார்
அல்லது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்?
பொதுமக்கள்,
'டாஸ்மாக்கை மூடுங்கள்' என்று கேட்கும்போது, அதை மூடுவதில் உங்களுக்கு என்ன
பிரச்னை? 'மூட மாட்டோம், மிதமாக குடியுங்கள்' என்று சொல்வதால், பொது
மக்களுக்கு என்ன நன்மை விளையும்?
கடைசியாக ஒரு கேள்வி...
'அமெரிக்காவில் மது விலக்கை பரிபூரணமாக கொண்டு வந்தபோது, மாபியா அதிகமாகி
இருக்கிறது' என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டு பிரச்னையை அமெரிக்காவுடன்
எதற்கு ஒப்பிட்டுக் கூறுகிறீர்கள்? தமிழ்நாட்டு காவல் துறையால் போதை
மாபியாக்களை கட்டுப்படுத்த முடியுமா, முடியாதா?
'தமிழ் நாட்டில்
போதைப் பொருள், டாஸ்மாக் மாபியாக்கள் பெருகிவிட்டனர். அரசியல்வாதிகளாகிய
எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. மக்களாகிய நீங்கள் தான் விழிப்புடன்
இருக்க வேண்டும்' என்று சொல்ல வருகிறீர்களா? அப்படியெனில், கடவுள் போல
எதற்கு, 'பில்டப்' கொடுக்கிறீர்கள்?
உங்களுடைய உளறலுக்கு எல்லையே இல்லையா கமல்?
சிலை வைக்க பணம் செலவு செய்யாதீர்கள்!
ரா.செந்தில்முருகன்,
திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டிற்கே பெருமை
சேர்த்த கோவை விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவுக்கு, கோவையில் 50 லட்சம் ரூபாய்
செலவில், சிலை அமைக்கப்படும் என்று, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின்
அறிவித்துள்ளார்.
விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் குணம் மற்றும் குடும்பத்தின் பாரம்பரியம் பற்றி அறிந்த கோவை மக்களுக்கு இது பெருமையே.
தமிழக
மக்களுக்காக முதன்முதலில் பேருந்து சேவையை அளித்தவர் நாயுடு. கோவையில்
பல்வேறு நலத்திட்டங்களுக்கு தங்கள் நிலங்களை தானமாக வழங்கிய பாரம்பரிய
மிக்க குடும்பம் அது.
கோவையில் உள்ள ஜி.டி.நாயுடு வளாகத்தில், அவரது
சிலை ஏற்கனவே அமைக்கப்பட்டு, சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே
மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு சிலை அமைப்பதை, அவரது ஆன்மா நிச்சயம்
ஏற்காது.
அதற்கு பதில், அந்த நிதியை, தமிழகத்தில் ஓட்டை உடைசலாக
ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகளை சரி செய்ய பயன்படுத்தினால், ஏழை
எளியவர்களுக்காக தன் விஞ்ஞான அறிவை பயன்படுத்திய ஜி.டி.நாயுடுவின் ஆன்மா
மகிழ்ச்சியடையும்!