/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ அழியவில்லை விலகியுள்ளன; 'வீட்டுப்பறவை' எனும் சிட்டுக்குருவி அழியவில்லை விலகியுள்ளன; 'வீட்டுப்பறவை' எனும் சிட்டுக்குருவி
அழியவில்லை விலகியுள்ளன; 'வீட்டுப்பறவை' எனும் சிட்டுக்குருவி
அழியவில்லை விலகியுள்ளன; 'வீட்டுப்பறவை' எனும் சிட்டுக்குருவி
அழியவில்லை விலகியுள்ளன; 'வீட்டுப்பறவை' எனும் சிட்டுக்குருவி
UPDATED : மார் 20, 2025 05:50 AM
ADDED : மார் 20, 2025 04:44 AM

ஓடு, தகரத்தால் வேயப்பட்ட வீடுகள் நிறைந்த வீதிகளில், வரிசை கட்டியிருக்கும் வீடுகள். கூரையின் இடுக்கில், கூடு கட்டி குடியிருக்கும் சிட்டுக் குருவிகள், சிறகடிக்கும்.
வீடுகளின் வாசலில் உரலில் வைத்து நெல் குத்தியும், கோதுமை, நிலக்கடலை, ராகி உள்ளிட்ட சிறு தானியங்களை முறத்தில் வைத்து புடைத்து, சுத்தம் செய்வர் இல்லத்தரசிகள். அதில் இருந்து தெறித்து விழும் தானியங்களின் மிச்சம் தான், சிட்டுக்குருவிகளின் பசியாற்றும் உணவு.
காலப்போக்கில் ஓட்டு வீடுகளும், குடிசை வீடு களும் கான்கிரீட் வீடுகளாக உருமாற, சிட்டுக் குருவிகளுக்கு இடமில்லாமல் போனது. கான்கிரீட் வீடுகளில் கூட, காற்று புகுவதற்காக சிறியளவில் 'வென்டிலேட்டர்'கள் வைக்கப்பட்டன.
அவற்றில் கூட, சிட்டுக்குருவிகள் கூடு கட்டின. இயற்கை காற்றுக்கும் பஞ்சம் ஏற்பட, செயற்கையான 'ஜில்' காற்று தரும், ஏ.சி.,க்கள் வந்த பின், வீடுகளில் வென்டிலேட்டர்களும் இல்லாமல் போனது. முழுக்க, முழுக்க கான்கிரீட் காடுகளாக மாறிப்போன நகர சூழலில், சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடமும் இல்லாமல் போனது.
மீண்டும் குடியமர்த்தலாம் வாங்க!
மொபைல் போன் டவரில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவிகள் பாதிக்கின்றன என்பது தவறான கருத்து. வீடுகளின் கூரை, இண்டு, இடுக்கில் மட்டுமே கூடுகட்டி வாழும் வீட்டுப்பறவை அது.
அதனால் தான், ஆங்கிலத்தில் 'ஹவுஸ் ஸ்பேரோவ்' என்கின்றனர். மனிதர்கள் எங்குள்ளனரோ, அங்கு தான், சிட்டுக்குருவிகளும் இருக்கும். கான்கிரீட் கட்டுமானங்களுக்குள் மனித வாழ்க்கை அடைபட்டதால், சிட்டுக் குருவிகளுக்கான வாழ்விடமும் தடைபட்டது. எனவே, சிட்டுக்குருவிகள் அழியவில்லை; மாறாக விலகிச் சென்றுள்ளன என்பதே யதார்த்தம்.
வல்லுாறு, பாறு கழுகுகள் போன்று, பெரியளவில் சிட்டுக்குருவிகளுக்கு வாழ்விடம் பாதிக்கப்பட்ட வில்லை' என இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் தெரிவித்துள்ளது.
எனவே, மீண்டும் அவற்றை குடியிருப்பு வளாகத்திற்குள் குடியமர்த்துவது மிக எளிது.ஒரு அட்டை பெட்டியில் சிறிய துளையிட்டு, வீட்டின் முற்றத்தில் தொங்கவிட்டு, அதில் கொஞ்சம் அரிசி வைத்தும், அதனருகில் ஒருபானை வைத்து, அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டால் போதும்; சிட்டுக்குருவிகள், தன் இனத்தை பெருக்கிக் கொள்ளும்.
சிட்டுக்குருவி ஏன் வேண்டும்
மனிதர்களுக்கு பல்வேறு நோய் பரவ காரணமான கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். பெரிய சிட்டுக்குருவிகள், அரிசி, தானியம் போன்ற தானியங்களை உணவாக்கிக் கொண்டாலும், தனது குஞ்சுகளுக்கு கொசு மற்றும் அதன் முட்டை, சிறிய புழுக்களை உணவாக கொடுக்கின்றன.
தான் உண்ணும் விதை, பழங்கள், சிறு தானியங்களின் விதைகள், சிட்டுக்குருவிகளின் எச்சம் மண்ணில் பரவி, விதையாகி, பின் மரமாகி, பல்லுயிர் சூழலுக்கு பாதுகாப்பு அரணாக மாறுகிறது. சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் விதமாகதான், இந்தாண்டு சிட்டுக்குருவி தினத்தின் மையக்கருத்தாக, 'நான் சிட்டுக்குருவியை நேசிக்கிறேன்' என்ற வாசகம் முன்வைக்கப்பட்டிருக்கிறது.
- ரவீந்திரன்,
திருப்பூர் இயற்கைபாதுகாப்பு கழக தலைவர்.