/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ 'டாட்டூ' போட்டுக்கொள்ளும் ஆளா நீங்கள் புற்றுநோய் ஆபத்து 20 சதவீதம் அதிகமாம்! 'டாட்டூ' போட்டுக்கொள்ளும் ஆளா நீங்கள் புற்றுநோய் ஆபத்து 20 சதவீதம் அதிகமாம்!
'டாட்டூ' போட்டுக்கொள்ளும் ஆளா நீங்கள் புற்றுநோய் ஆபத்து 20 சதவீதம் அதிகமாம்!
'டாட்டூ' போட்டுக்கொள்ளும் ஆளா நீங்கள் புற்றுநோய் ஆபத்து 20 சதவீதம் அதிகமாம்!
'டாட்டூ' போட்டுக்கொள்ளும் ஆளா நீங்கள் புற்றுநோய் ஆபத்து 20 சதவீதம் அதிகமாம்!
ADDED : ஜூன் 06, 2024 02:25 AM

லுண்ட் : ஸ்வீடனில் உள்ள லுண்ட் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'டாட்டூ' எனப்படும் பச்சை குத்துவதால், ரத்த வெள்ளை அணுக்களை பாதிக்கும் அரிதான ரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
டாட்டூ போடும் மோகம் இளைஞர்களிடையே அதிகரித்துள்ளது. டாட்டூ போட பயன்படுத்தப்படும் ரசாயன மையினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஐரோப்பா நாடான ஸ்வீடனின் லுண்ட் பல்கலையைச் சேர்ந்த நோயியல் ஆய்வாளர் கிறிஸ்டல் நீல்சன் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது.
உலகில் டாட்டூ போட்டவர்கள் அதிகம் பேர் உள்ள நாடு ஸ்வீடன். இங்கு ஐந்தில் ஒருவர் டாட்டூ போட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.எனவே டாட்டூ போடுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிய, அந்நாட்டு மக்களை தேர்ந்தெடுத்தனர்.
அதில், 2007 முதல் 2017 வரையிலான காலத்தில் லிம்போமா எனும் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 20 முதல் 60 வயதினர் அனைவரையும் ஆய்வு செய்தனர்.
அவர்களில் டாட்டூ போட்டவர்களிடம், அதை போடும் போது இருந்த வயது, பயன்படுத்திய மையின் நிறங்கள், அதன் அளவு, புகைப்பிடிக்கும்பழக்கம் ஆகியவை குறித்த பதில்களை பெற்றனர்.
இதே போன்ற ஆய்வினை டாட்டூ போடாதவர்களிடமும், புற்றுநோய் இல்லாத நபர்களிடமும் நடத்தினர். 5,591 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்முடிவில், டாட்டூ போட்டவர்களுக்கு அரிதான ரத்த புற்றுநோய் ஏற்படும்வாய்ப்பு, 21 சதவீதம் அதிகம் உள்ளதை கண்டுபிடித்தனர். சிறிய டாட்டூவாக இருந்தாலும் இது பொருந்தும் என கூறியுள்ளனர்.
ரத்த நாளங்களில் படியும் டாட்டூவின் மையினால் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் துாண்டப்படுவதாகவும், அவை டாட்டூ மையை வேற்று பொருள் என அகற்ற முற்படும் போது, வெள்ளை அணுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு, அரிதான ரத்த புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதாக கூறிஉள்ளனர்.