/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/ மருத்துவமனைக்கு ஆணாக சென்றவர் பெண்ணாக மாறிய அதிர்ச்சி மருத்துவமனைக்கு ஆணாக சென்றவர் பெண்ணாக மாறிய அதிர்ச்சி
மருத்துவமனைக்கு ஆணாக சென்றவர் பெண்ணாக மாறிய அதிர்ச்சி
மருத்துவமனைக்கு ஆணாக சென்றவர் பெண்ணாக மாறிய அதிர்ச்சி
மருத்துவமனைக்கு ஆணாக சென்றவர் பெண்ணாக மாறிய அதிர்ச்சி
ADDED : ஜூன் 21, 2024 12:53 AM

முசாபர்நகர், உத்தர பிரதேசத்தில், மருத்துவமனைக்கு ஆணாக சென்ற நபர், நண்பரின் சதியால் பெண்ணாக திரும்பி வந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
உ.பி.,யின் முசாபர்நகரில் உள்ள சன்ஜக் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஜாஹித், 20. அதே கிராமத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவர் இவரது நண்பர்.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த முஜாஹித்தின் தந்தைக்கு சொந்தமான நிலங்கள் உள்ளன. அதை அபகரிக்க திட்டமிட்ட ஓம்பிரகாஷ், விபரீத திட்டம் ஒன்றை தீட்டினார்.
தனக்கு சில உடல்நலப் பிரச்னை இருப்பதாக முஜாஹித்திடம் கூறியவர், கடந்த 3ம் தேதி, மன்சூர்புரில் உள்ள பேக்ராஜ்பூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தன்னை அழைத்து செல்லும்படி முஜாஹித்திடம் கூறினார்.
அதை நம்பி நண்பனை மருத்துவமனைக்கு முஜாஹித் அழைத்து சென்றார். அங்குள்ள டாக்டர்களிடம் ஏற்கனவே பேசி வைத்தபடி, முஜாஹித்துக்கு வலுக்கட்டாயமாக, 'அனஸ்தீஷியா' கொடுத்து அவரை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, முஜாஹித்தின் பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை வாயிலாக அகற்றி அவரை பெண்ணாக மாற்றினர். மறுநாள் கண்விழித்த முஜாஹித்திடம், 'நீ பெண்ணாக மாறிவிட்டாய்' என, ஓம்பிரகாஷ் தெரிவித்தார்.
அதிர்ச்சி அடைந்த முஜாஹித், இது குறித்து தன் தந்தையிடம் கூறி அழுதுள்ளார். அவரது தந்தையும், விவசாய சங்கமான பாரதிய கிசான் யூனியன் தலைவர் ஷியாம் பால் என்பவரும் போலீசில் கடந்த 16ம் தேதி புகார் அளித்தனர்.
இந்த சதிக்கு காரணமானவர்களையும், டாக்டர்களையும் கைது செய்யும்படி விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஷியாம் பால் கூறியதாவது:
முஜாஹித்தை ஏமாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஓம்பிரகாஷ், அவருக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். 'இனி நீ நினைத்தாலும் உன் வீட்டுக்கு செல்ல முடியாது. உன்னை உன் குடும்பத்தார் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இனி நீ என்னுடன் தான் வாழ வேண்டும்.
'வக்கீல் ஒருவரை ஏற்பாடு செய்துள்ளேன். நம் இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. அதன் பின் உன் தந்தையை சுட்டுக் கொன்று உன் பங்கு சொத்துகளை என் பெயரில் எழுதிக்கொள்வேன்.
'அந்த சொத்துகளை விற்றுவிட்டு, லக்னோ சென்று என் இஷ்டப்படி வாழப்போகிறேன்' என, கூறியுள்ளார். இந்த மருத்துமனையில் உறுப்புகளை திருடி விற்கும் சம்பவம் நடக்கிறது. இதில் தொடர்புடைய மருத்துவர்களை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓம்பிரகாஷை கைது செய்த போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.