/தினம் தினம்/இதப்படிங்க முதல்ல/தர்மபுரியிலிருந்து லடாக் வரை பைக்கில் பெண் சாகச பயணம்தர்மபுரியிலிருந்து லடாக் வரை பைக்கில் பெண் சாகச பயணம்
தர்மபுரியிலிருந்து லடாக் வரை பைக்கில் பெண் சாகச பயணம்
தர்மபுரியிலிருந்து லடாக் வரை பைக்கில் பெண் சாகச பயணம்
தர்மபுரியிலிருந்து லடாக் வரை பைக்கில் பெண் சாகச பயணம்
ADDED : ஜூன் 18, 2024 05:06 AM

தர்மபுரி : தர்மபுரியிலிருந்து லடாக் வரை, 4,000 கி.மீ., துாரத்தை, இளம்பெண் ஒருவர் தனியாக பைக்கில் சாகச பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோட்டை சேர்ந்தவர் ஸ்வேதா, 23; முதுகலை பட்டம் படித்துள்ளார். ஆண்களைப் போல் தொலைதுாரப் பயணங்களை பைக்கில் மேற்கொள்வது இவரது கனவாக இருந்தது. இதை பெற்றோரிடம் தெரிவித்தார்.
பாதுகாப்பு கருதி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண்கள் தனியாகச் செல்வதை, பாதுகாப்பு குறைபாடாகக் கருதுவதை முறியடித்து, தொலைதுாரப் பயணங்கள் தனியாக மேற்கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, லடாக் பயணம் மேற்கொள்ள உள்ளதாக பெற்றோரிடம் தெரிவித்து, சம்மதம் பெற்றார்.
இதற்காக, கடந்த ஓராண்டாக தனக்கு தெரிந்த டெய்லரிங் தொழில் மூலம், சிறுக சிறுக பணம் சேர்த்து, 2.50 லட்சம் ரூபாயில் 'யமஹா ஜாரா' பைக் வாங்கினார்.
பின்னர், தொலைதுாரப் பயணத்திற்கு தன்னை மேம்படுத்திக் கொள்ள அவ்வப்போது 500, 1,000 கி.மீ., பயணங்களை மேற்கொண்டு, 10,000 கி.மீ., வரை பயணம் செய்து, அந்த அனுபவத்தால், கடந்த மே 30ல் அவருடைய பிறந்த நாளன்று, பாலக்கோட்டிலிருந்து லடாக் நோக்கி பைக் சாகச பயணத்தை துவங்கினார்.
தொடர் மழை, கடும் வெயில் மற்றும் குளிரால் ஆங்காங்கே பயணத்தில் சிறு சிறு பிரச்னைகளை சந்தித்தாலும், நாளொன்றுக்கு, 300 முதல் 350 கி.மீ., பயணம் மேற்கொண்டு, கடந்த 13ல் லடாக் சென்றடைந்து, லட்சியப் பயணத்தை நிறைவேற்றினார்.
இப்பயணம் பற்றி அவர் கூறுகையில், ''எனக்கு கிடைத்த அனுபவங்களை, மற்ற பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க, தன் சமூக வலைதள பக்கத்தில், பல பாகங்களாக தொகுத்து வெளியிட உள்ளேன்.
இது, தனியாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அனுபவத்தின் மூலம், இனி வரும் காலங்களில், சிறு சிறு குழுவாக சாகச பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஒருங்கிணைத்து, இந்தியா முழுதும் பல்வேறு இடங்களுக்கு, பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உள்ளேன்,'' என்றார்.