PUBLISHED ON : செப் 19, 2025 12:00 AM

தமிழக துணை முதல்வர் உதயநிதி: தமிழக அரசு, பெண்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மகளிர் விடியல் பயண திட்டத்தில், அரசு பஸ்களில் இதுவரை, 77 கோடி முறை பெண்கள் இலவசமாக பயணித்துள்ளனர். 1.15 கோடி பெண்கள் மாதம், 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை பெறுகின்றனர். சில குறைபாடுகளால் விடுபட்ட பெண்களுக்கும், விரைவில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும்.
டவுட் தனபாலு: நாலரை வருஷமா நீங்க தான் ஆட்சி பண்றீங்க... உங்க பேச்சை தான் அதிகாரிகளும் கேட்கிறாங்க... அப்படியிருந்தும் சில குறைபாடுகள் எப்படி வந்துச்சு என்ற, 'டவுட்' வருதே... தேர்தல்ல ஓட்டு களை வளைக்கிறதுக்காக, 'தகுதி யில்லை' என்று நிராகரிக்கப்பட்ட எல்லாருக்கும் மகளிர் உரிமைத் தொகையை வாரி வழங்க போறீங்களோ என்ற, 'டவுட்'டும் கூடவே வருது!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க ., வில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா, செங்கோட்டையன் ஆகியோரை அண்ணாதுரை பிறந்த நாள் விழாவில் ஒன்றாக சந்திக்க வைக்க, பெங்களூரு புகழேந்தி எடுத்த முயற்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால், அதிருப்தி அடைந்த அவர், 'கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பவர்களையே ஒன்று சேர்க்க முடியவில்லை; இவர்களை வைத்துக்கொண்டு கட்சியை எப்படி ஒருங்கிணைக்க முடியும்?' என, விரக்தி அடைந்துள்ளார்.
டவுட் தனபாலு: அதானே... இந்த நாலு பேருமே, 'நான் பெரியவனா, நீ பெரியவனா'ன்னு, 'ஈகோ' பார்த்துட்டு கிழக்கும், மேற்குமா நிற்கிறாங்க... இவங்க முதலில் ஒன்று சேர்ந்து, அ.தி.மு.க.,வுல இவங்களை இணைச்சு, தேர்தலை எதிர்கொண்டு ஆட்சியை பிடிக்கிற கதையெல்லாம் இந்த நுாற்றாண்டில் நடக்குமா என்பது, 'டவுட்' தான்!
தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: விஜயகாந்துடன் வேறு ஒருவரை ஒப்பிடுவது தவறு. விஜய் பேசுவதை வைத்து, எங்களிடம் யூகங்களாக கேள்வி கேட்பதை விட்டு விட்டு, விஜயிடமே கேள்விகளை கேளுங்கள். எங்களை போன்றவர்களிடம் விஜய் பற்றி கேட்பது தவறு. விஜய் பற்றியும், கூட்டணி பற்றியும் இனிமேல் என்னிடம் பேசாதீர்கள்.
டவுட் தனபாலு: உங்க மகன் விஜய பிரபாகரன், விஜயை பாராட்டி பேசுறாரு... நீங்க, விஜய் பெயரை கேட்டாலே எரிஞ்சு விழுறீங்களே... தி.மு.க., - அ.தி.மு.க., அணிகள்ல இடம் கிடைக்காதவங்களுக்கு கடைசி புகலிடம் விஜய் கட்சி தான்... அதனால, அவர் விஷயத்துல நீங்க அடக்கி வாசிப்பதே நல்லது என்பதில், 'டவுட்'டே இல்லை!