PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

தே.மு.தி.க., இளைஞர் அணி செயலர் விஜய பிரபாகரன்: தே.மு.தி.க., எந்த கூட்டணியில் இருக்கிறதோ, அந்த கூட்டணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்துக்கும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் நல்ல நட்பு உண்டு. விஜயை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவரது சினிமா நிகழ்ச்சிகள் பலவற்றுக்கும் சென்றுள்ளேன். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; எதிரியும் இல்லை. விஜயகாந்தின் ரசிகர்கள் இதை புரிந்து நடந்து கொள்வர்.
டவுட் தனபாலு: இவங்க அம்மா பிரேமலதா, தி.மு.க.,வுக்கு, 'லெப்ட் இன்டிகேட்டரை'யும், அ.தி.மு.க.,வுக்கு, 'ரைட்'ல கையையும் காட்டிட்டு இருக்காங்க... இவர், அவங்களையே மிஞ்சுற விதமா, நேரா த.வெ.க.,வை நோக்கி ஆக்சிலேட்டரை முறுக்குறாரே... கூட்டணிக்கு அ.தி.மு.க., - தி.மு.க.,வை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்னு மாத்தி யோசிக்கிறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக காங்., மேலிட பார்வையாளர் கிரிஷ் சோடங்கர்: தமிழக காங்கிரஸ் கட்சியில், 22,000 கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 2 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். தமிழகத்தில், 117 சட்டசபை தொகுதிகளை குறி வைத்து பணி செய்வோம். தேர்தலில், 125 சட்டசபை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
டவுட் தனபாலு: அது சரி... 125 தொகுதிகள் கேட்கிற அளவுக்கு தமிழக காங்கிரசும் வளரலை... தி.மு.க.,வும் அந்த அளவுக்கு பலவீனமாக இல்லை... 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு எதையோ மேய்க்க'ன்னு கிராமங்கள்ல ஒரு பழமொழி சொல்வாங்க... அந்த மாதிரி தான் இவரது ஆசையும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன்: தே.ஜ., கூட்டணியை விட்டு நாங்கள் வெளியேறிய தற்கு முழுமுதல் காரணம், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தான். வரும் சட்ட சபை தேர்தலுக்கு, யாரும் நினைக்காத ஒரு கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளது. அப்படி அமையும் கூட்டணியில், அ.ம.மு.க.,வும் இடம் பெறலாம். அந்த கூட்டணி வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: யாருமே நினைக்காத கூட்டணி என்றால் என்ன... ஒருவேளை இவர், பன்னீர்செல்வம், சசிகலா எல்லாரும் சேர்ந்து, 'பேசாம தி.மு.க.,வுடனே கூட்டணி அமைச்சுடலாம்... இன்னைக்கு தேதிக்கு அதுதான் ஜெயிக்கிற குதிரையா தெரியுது' என்ற முடிவுக்கு வந்துட்டாங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!