PUBLISHED ON : மே 25, 2025 12:00 AM

தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை: 'டாஸ்மாக்' விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஒரு தனிநபர் தவறு செய்தால், அந்த துறை மீதோ, அரசு மீதோ எப்படி குற்றம் சாட்ட முடியும்? ஏற்கனவே, டாஸ்மாக்கில் தவறு செய்த, 41 பேர் மீது விசாரணை நடக்கிறது. அமலாக்கத் துறையை வைத்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நடத்தப்படும் பழி வாங்கும் நடவடிக்கையை, பா.ஜ., அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும்.
டவுட் தனபாலு: நல்லது... அதேபோல, 'பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உள்ளது' என்ற தமிழக அரசின் சட்டத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தடை விதிச்சிருக்கே... இது பற்றியும் கருத்து தெரிவிச்சிருந்தால், 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
சிவகங்கை காங்., - எம்.பி., கார்த்தி: அ.தி.மு.க., கூட்டணியை குறைத்து மதிப்பிட முடியாது; நல்ல ஓட்டு வங்கி உள்ளது. தற்போது பா.ஜ.,வுடன் வைத்துள்ள கூட்டணியை, அ.தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் விரும்ப வில்லை. அது, பின்னடைவாக இருக்கலாம். விஜய் கட்சிக்கு, 'எனர்ஜி' இருக்கிறது; அது, ஓட்டு வங்கியாக மாறுமா என்பதை கணிக்க முடியாது. விஜய் கட்சிக்கு இன்னும் தெளிவான கூட்டணி வரவில்லை. என்னை பொறுத்தவரை தி.மு.க., கூட்டணி, 2026 தேர்தலில் வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: நீங்க சொல்ற மாதிரி, நல்ல ஓட்டு வங்கி இருக்கும் அ.தி.மு.க., கூட்டணியும், 'எனர்ஜி' மிக்க விஜய் கட்சியும் கூட்டணி சேர்ந்துட்டா, 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி தேறுமா என்பது, 'டவுட்' தான்!
தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை: தமிழக அரசு நடத்தும், 'டாஸ்மாக்' நிறுவனத்தின் ஒரே நோக்கம், மக்கள் மது போதையில் இருப்பதை உறுதி செய்வதுடன், தி.மு.க.,வினர் லாபம் ஈட்டுவதை உறுதி செய்வது தான். சட்டவிரோத மதுக்கூடங்கள், மது விற்பனை கடைகளில் இருந்து கணக்கில் வராத பணம், தி.மு.க., அமைச்சர்களின் கஜானாவில் சேர்கிறது.
டவுட் தனபாலு: அடுத்த வருஷம் சட்டசபை தேர்தல் வருதே... கோடிகளை வாரி இறைத்தால் தானே, ஆட்சி, அதிகாரத்தை தக்க வச்சுக்க முடியும்... அதனால தான், 'டாஸ்மாக்' மது விற்பனை முறைகேட்டில் ஈடுபட்டு, குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்துட்டு இருக்காங்களோ என்ற, 'டவுட்' தான் வருது!