PUBLISHED ON : மே 19, 2025 12:00 AM

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு: முதல்வர் ஸ்டாலினின் ஆஸ்தான கொத்தடிமை அமைச்சர் ரகுபதி. ஜெயலலிதா கைகாட்டவில்லை என்றால், ரகுபதி எங்கு இருந்திருப்பார் என்பதே தெரியாது. இவருக்கு அரசியல் வாழ்வளித்த அ.தி.மு.க., தொண்டர்களின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்தவர் தான் ரகுபதி.
டவுட் தனபாலு: ஏன் இப்படி உணர்ச்சி வசப்படுறீங்க... அரசியலில், ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்கிறது எல்லா கட்சியிலும் நடக்கிறது தானே... உங்களது தற்போதைய தலைவர் பழனிசாமி, யாரால் முதல்வர் ஆனாரு... அவரை கைதுாக்கி விட்டவங்க இன்று எங்க இருக்காங்க என்பதை எல்லாம் யோசித்தால், ரகுபதி அரசியல் எல்லாம் சர்வ சாதாரணம் என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: தமிழக காங்., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பேசிய, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், 'நம் எம்.எல்.ஏ.,க்கள் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு போராட வேண்டும். அப்போதுதான் காங்கிரஸ் மீது நம்பிக்கை ஏற்படும். அரசின் தவறுகளை துணிச்சலாக சுட்டிக்காட்ட வேண்டும். சட்டசபை தேர்தல் தொகுதி பங்கீட்டில் தி.மு.க., தரப்பில் நெருக்கடி தரும்பட்சத்தில், த.வெ.க., - வி.சி., கட்சிகளுடன் இணைந்து, காங்கிரஸ் ஏன் தனி அணி அமைக்கக் கூடாது' என, கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
டவுட் தனபாலு: அது சரி... 50 வருஷத்துக்கும் மேலா, அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாறி மாறி காவடி துாக்கியாச்சு... ஒரு மாறுதலுக்காக அடுத்து விஜய் கட்சிக்கும் காவடி துாக்குவோம்கிற முடிவுக்கு வந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்: அன்பு சகோதரர் விஜய், அரசியல் கட்சி துவங்கியபோதே வரவேற்றேன். அவரது இலக்கு, எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை, அரசியல் செயல்பாடுகளை பார்த்துதான் சொல்ல முடியும் என்றும் சொல்லியிருந்தேன். நல்ல இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கும் அவர், அடுத்து எப்படி செயல்படுகிறார் என்பதையும் கவனிக்கிறேன்.
டவுட் தனபாலு: எந்த அரசியல் அனுபவமும் இல்லாத விஜய், கோட்டையை பிடிச்சே தீருவேன் என்ற இலக்கில் தெளிவாகத்தான் இருக்காரு... கிட்டத்தட்ட, 40 வருஷத்துக்கு மேலான அரசியல் அனுபவம் மிக்க, முன்னாள் முதல்வரான நீங்கதான் இலக்கு தெரியாம தடுமாறிட்டு இருக்கீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!