Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டவுட் தனபாலு/ 'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

PUBLISHED ON : மே 16, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன்: வாழையடி வாழையாக, தி.மு.க., ஆண்டுக்கு ஆண்டு வளர்கிறது. அண்ணாதுரைக்கு பின் கருணாநிதி, அவருக்கு பின் ஸ்டாலின் என, வாழையடி வாழையாக வளர்ந்து வந்துள்ளது. இத்தனை ஆண்டு காலம், அரசியலில் எதையும் எதிர்கொண்டு நிற்கும் கட்சியின் வரலாறு இது. இக்கட்சியை யாரும் அவ்வளவு எளிதாக ஒன்றும் செய்ய முடியாது.

டவுட் தனபாலு: 'வாழையடி வாழையாக தி.மு.க.,வில் வாரிசு அரசியல் வளர்கிறது... கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி என அது தொடர்ந்து கொண்டே போகும்... என்னை போன்றவங்க, இரண்டாம் இடத்துடன் ஆறுதல்பட்டுக்க வேண்டியது தான்' என்ற தனது ஆற்றாமையை இப்படி வெளிப்படுத்துறாரோ என்ற, 'டவுட்'தான் வருது!





தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் வசம் ஒருநாள் வரும். பாகிஸ்தான் என்ற நாடு சிதறுண்டு போகும். பாகிஸ்தான், வங்கதேசம் என்று ஏற்கனவே இரண்டாக உடைந்து போனது; விரைவில் பலுாசிஸ்தானாக, மூன்றாக உடையும். இனி போரை பற்றி, பாகிஸ்தான் சிந்திப்பது சந்தேகம்தான். அந்த அளவுக்கு இந்தியா பாடம் கற்பித்துள்ளது.

டவுட் தனபாலு: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா பக்கம் வருதோ, இல்லையோ... நம்ம பக்கம் இருக்கும் காஷ்மீர் மக்களும், அங்கு போகும் சுற்றுலா பயணியரும் பத்திரமாக இருக்கணும் என்பதுதான் முக்கியம்... 'இனி எல்லாரும் பாதுகாப்பா இருக்கலாம்' என்ற நம்பிக்கையை மோடி அரசு ஏற்படுத்தித் தந்திருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை!





அறந்தாங்கி தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., உதயம் சண்முகம்: கடந்த 2006 - 2011 வரை நான் இங்கு எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது, தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி அமைத்து, பேருந்து வசதியும் ஏற்படுத்திக் கொடுத்தேன். ஆனால், அறந்தாங்கி தொகுதிக்கு ஒரு புதிய பேருந்துகூட தற்போதைய காங்., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் வாங்கித் தரவில்லை. அதேபோல, சாலை வசதிகளும் இல்லை. இது வெட்கப்பட வேண்டிய விஷயம். அவர் இங்கு மீண்டும் போட்டியிட்டால் தோல்வி நிச்சயம்.

டவுட் தனபாலு: அது சரி... ராமச்சந்திரனுக்கு மக்கள் ஓட்டு போடுறாங்களோ, இல்லையோ... 'தொகுதியை மறுபடியும் காங்கிரசுக்கு தந்து, எனது எம்.எல்.ஏ., கனவில் மண் அள்ளிப் போட்டால், நானே அவரை தோற்கடிச்சிடுவேன்'னு உங்க கட்சி தலைமைக்கு மறைமுகமா மிரட்டல் விடுக்குறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!







      Our Apps Available On




      Dinamalar

      Follow us