PUBLISHED ON : மார் 23, 2025 12:00 AM

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்: முதல்வர் ஸ்டாலின் போட்டோக்களை, 'டாஸ்மாக்' கடைகளில் பா.ஜ.,வினர் வைக்கின்றனர். அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகளில் முதல்வர் போட்டோ வைப்பதால் அரசுக்கும், முதல்வருக்கும் பெருமை தான். இதை புரிந்து கொள்ளாத முதல்வர், போட்டோக்களை வைக்கும் பா.ஜ.,வினரை கைது செய்து வருகிறார்.
டவுட் தனபாலு: அதானே... பல நுாறு கோடி ரூபாய் நஷ்டத்துல ஓடுற போக்குவரத்து கழகங்கள், ஆவின் அலுவலகங்களில் எல்லாம் முதல்வரின் படத்தை பெருசு பெருசா மாட்டி வச்சிருக்காங்க... 50,000 கோடி ரூபாயை அரசுக்கு அள்ளி தரும் டாஸ்மாக் கடைகள்ல, முதல்வர் படம் வைத்தால் மட்டும் ஏன் கோபப்படுறாங்க என்ற, 'டவுட்' வருதே!
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்: 'டாஸ்மாக்' கடைகள்தோறும் பாதுகாப்புக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபை, முதல்வர் வீடு உள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இப்படி, ஆளுங்கட்சிக்கு பணி செய்வதை மட்டுமே போலீஸ் துறை செய்து கொண்டிருக்கிறது. தமிழக அரசுக்கு எதிராக, ஜனநாயக வழியில் போராடுவோரை தடுப்பதிலேயே, போலீசின் முழு சக்தியும் செலவிடப்படுகிறது.
டவுட் தனபாலு: இந்த ஆட்சி மட்டுமல்ல; எந்த ஆட்சி வந்தாலும் போலீசாரின் நிலை இது தான்... நாளைக்கே, தமிழகத்துல பா.ஜ., ஆட்சிக்கு வந்தாலும், உங்களுக்கு சேவை செய்யவும் போலீசார் தயாராகவே இருப்பாங்க... ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறாது என்பது தான், 'டவுட்' இல்லாத உண்மை!
பத்திரிகை செய்தி: 'கடந்த தேர்தல்களில் தி.மு.க.,வுடன் கூட்டணி அமைந்திருந்தால், தே.மு.தி.க.,வுக்கு சட்டசபையிலும், லோக்சபாவிலும் பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கும். அ.தி.மு.க.,விடம் போய் அனைத்தையும் இழந்து விட்டோம்' என எண்ணுகிறார் பிரேமலதா. தி.மு.க., கூட்டணியில் சேர காய் நகர்த்தி வரும் பிரேமலதா, சட்டசபை தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா எம்.பி., பதவி கேட்டு, மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசிய தகவலும் வெளியாகி உள்ளது.
டவுட் தனபாலு: முந்தா நாள் வரைக்கும் தி.மு.க., அரசை தாறுமாறா திட்டி தீர்த்துட்டு இருந்தாங்க... இப்ப, அ.தி.மு.க.,வுல கதவுகள் அடைக்கப்பட்டதும், தி.மு.க., பக்கம் திரும்புறாங்களே... இங்கயும் ஏத்துக்கலை என்றால், பா.ஜ., பக்கம் வண்டியை திருப்பிடுவாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!