PUBLISHED ON : மே 19, 2026 12:13 AM

ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்: சங்க தமிழர்கள் சனாதன ஹிந்து தர்மத்தை பின்பற்றினர். சனாதனம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பது சனாதனம். அந்த கொள்கையை ஏற்றவர் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை. துர்கா ஸ்டாலினே சனாதன கொள்கையை தான் பின்பற்றுகிறார். ஆனால், உதயநிதியோ ஹிந்து தர்மத்தை விமர்சித்து வருகிறார்.
டவுட் தனபாலு: அது சரி... சனாதன தர்மத்தை வம்புக்கிழுத்தது, திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது போன்ற ஹிந்து விரோத செயல்கள் தான், இன்னைக்கு தி.மு.க.,வை எதிர்க்கட்சி வரிசைக்கு தள்ளியிருக்குது... இனியும், உதயநிதி இப்படியே பேசிட்டு இருந்தால், அடுத்த தேர்தலில் இதுவும் மிஞ்சுமா என்பது, 'டவுட்'தான்!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில், முன்னாள் அமைச்சர் வேலுமணி அணிக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகளின் கட்சி பதவிகளை, பொதுச்செயலர் பழனிசாமி பறித்து வருகிறார். அந்த வகையில், புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலர் வைரமுத்து, தென்காசி வடக்கு மாவட்ட செயலர் கிருஷ்ணமுரளி ஆகியோர், அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டவுட் தனபாலு: அது சரி... இப்படி தினமும் நிர்வாகிகளை நீக்கிட்டே இருந்தால், ஒரு கட்டத்தில் நீக்குறதுக்கு கட்சியில் நிர்வாகிகள் இருப்பாங்களா என்பது, 'டவுட்'தான்... ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துற காமெடி மாதிரி, கடைசியில் பழனிசாமி மட்டும் தான் கட்சியில் எஞ்சியிருப்பார் என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் வீரபாண்டியன்: ஏழை எளிய மக்களுக்கான ஆட்சி நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அந்த வகையில் தான், த.வெ.க., அரசின் செயல்பாடு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அரசின் செயல்பாடுகளுக்கு ஏற்பவே, எங்கள் அணுகுமுறை இருக்கும். எங்களுக்கு நாட்டின் நலனே முக்கியம். குதிரை பேரம் பற்றி அறியாத நாங்கள், அதுபற்றி கருத்து கூற முடியாது.
டவுட் தனபாலு: எல்லா கட்சியினருமே, 'ஏழை எளிய மக்களுக்காக ஆட்சி நடத்துவோம்'னு சொல்லி தான் அதிகாரத்துக்கு வர்றாங்க... அப்புறமா அதை மறந்துடுறாங்க... உங்களது பழைய பங்காளியான தி.மு.க.,வினர் இதை மறந்ததால தான், இன்னைக்கு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்திருக்காங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!





