PUBLISHED ON : ஜூலை 28, 2024 12:00 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப் பிரிவின்படி, சென்னை ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதியில், தி.மு.க., வேட்பாளராக போட்டி யிட்ட வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னாவை, குற்ற வழக்கு தொடர்பு துறை பொறுப்பு இயக்குனராக நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக, அரசியல் சார்புள்ள ஒருவரை, தி.மு.க., அரசு நியமித்துள்ளது தவறான முன்னுதாரணம்.
டவுட் தனபாலு: முன்னாள் முதல்வர் கருணாநிதி, தன் ஆட்சி காலத்துல, தி.மு.க., பிரமுகரான சபாபதி மோகனை, நெல்லை பல்கலைக்கு துணைவேந்தராகவே நியமிச்சாரு... தந்தை எவ்வழி; தனயன் அவ்வழி என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: 'தமிழகத்தில் 18 கிளை சிறைகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள சிறைகள், சமூக விரோதிகள் சதித் திட்டம் தீட்டும் கூடாரமாக உள்ளன. இந்நிலையில், சிறு வழக்குகளில் சிறைக்கு வருபவர்கள், மத்திய சிறைகளுக்கு மாற்றப்படும் போது, பெரும் குற்றவாளிகளாக மாற வாய்ப்பாகி விடும்' என, சிறை துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
டவுட் தனபாலு: அது சரி... அஞ்சும், பத்தும் திருடியவனை, கொடூர குற்றங்களை அசால்டா செய்த மத்திய சிறை கைதிகளுடன் சேர்த்து அடைத்தால் என்னவாகும்... 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்பதற்கு உதாரணமா, சின்ன திருடர்கள் எல்லாம், தாதாவா தான் திரும்பி வருவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பிரதமர் நரேந்திர மோடி: கார்கில் போரில், நம் வீரர்கள் தேசத்திற்காக செய்த தியாகங்கள் என்றும் அழியாதவை என்பதை, கார்கில் வெற்றி தினம் நமக்கு நினைவூட்டுகிறது. கடந்த கால வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்த பாடத்தையும் கற்கவில்லை. பயங்கரவாதிகளின் பின்னால் ஒளிந்து, தொடர்ந்து நம் மீது போர் தொடுக்கின்றனர். அவர்களின் தீய நோக்கங்கள் வெற்றி பெற விடமாட்டோம்.
டவுட் தனபாலு: கார்கில் போர் முடிஞ்சு, கால் நுாற்றாண்டு கடந்தும், பக்கத்து நாடான பாகிஸ்தான் திருந்தியது மாதிரி தெரியலையே... நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்பாங்க... பாகிஸ்தானுக்கு நாம எத்தனை சூடு போட்டாலும், சொரணை வருமா என்பது, 'டவுட்' தான்!