PUBLISHED ON : ஜூன் 26, 2024 12:00 AM

பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி சம்பவம் நடந்து, ஒரு வாரம் ஆகி விட்டது. இதுவரையில், பாதிக்கப்பட்ட அந்த பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் வாயிலாக அரை மணி நேரத்தில் சென்று விடலாம். ஆனால், அவர் அங்கு செல்வதற்கான அறிகுறியே தெரியவில்லை.
டவுட் தனபாலு: அங்கு சென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் ஆவேச கேள்விகளுக்கு அவரால் பதில் தர முடியாதே... அதனால, இப்ப இல்லை, இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், முதல்வர் அங்க போகவே மாட்டார் என்பதில், 'டவுட்'டே இல்லை!
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி: அரசின் அலட்சியத்தால் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, 58 பேர் இறந்துள்ளனர். இதற்கு தி.மு.க., அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். கள்ளச்சாராய சம்பவத்தில் போலீஸ் மூலமோ, ஒரு நபர் ஆணையம் மூலமோ நீதி கிடைக்காது. சி.பி.ஐ., விசாரித்தால் மட்டுமே நீதி நிலை நாட்டப்படும்.
டவுட் தனபாலு: போலீசார் விசாரித்தால் நீதி கிடைக்காது என்பதை, நாலு வருஷமா முதல்வரா இருந்து, உள்துறையை கையில் வச்சிருந்த உங்களை விட யாராலயும் தெளிவா சொல்ல முடியாது... ஆனா, உங்க ஆட்சியிலும், உங்க தலைவி ஜெ., ஆட்சியிலும் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு எல்லாம் சி.பி.ஐ., விசாரணை வைக்காதது ஏன் என்ற, 'டவுட்' எழுதே!
மா.கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன்: தமிழகத்தில், ஜாதிய துவேஷத்தின் காரணமாக, ஜாதி ஆணவப் படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது கவலையளிக்கிறது. ஜாதிய துவேஷத்தின் காரணமாக நடந்து வருகிற, ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க, நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: தமிழகத்தில், மூணு வருஷமா திராவிட மாடல் அரசாங்கம் நடக்குது... இதுக்கு முன்னாடி, முதல்வரின் தந்தை பல வருஷங்களா தமிழகத்தை ஆட்சி செய்திருக்கார்... அப்படி இருந்தும், ஆணவக் கொலைகளை தடுக்க சட்டம் இயற்றாம அவங்களை தடுத்தது யார் என்ற, 'டவுட்' வருதே!