PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM

மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன்: கள்ளக்குறிச்சியில் நடந்துள்ள சம்பவம் மிகவும் வேதனைக்குரியது; கண்டனத்திற்குரியது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் கையாலாகாத போக்கையே இச்சம்பவம் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரான முத்துசாமி, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் செய்ய மறுத்தால், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
டவுட் தனபாலு: சரியா போச்சு... 'மதுவிலக்கு' என முத்துசாமியின் துறைக்கு பொருத்தமில்லாத பெயரை வச்சிருக்கிற மாதிரியே, தனக்கும், இந்த சம்பவத்துக்கும் பொறுப்பில்லை என்பது மாதிரி தானே அவர் இருக்காரு... ஆனா, இதை எல்லாம் பார்த்துட்டு, மலிவு விலை மது விற்பனையை துவங்கிடுவாரோ என்ற, 'டவுட்'தான் வருது!
இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன்: கள்ளக்குறிச்சியில் சாராயம் விற்பது முதல்வருக்கும், டி.ஜி.பி.,க்கும் தெரியாது. ஆனால் உள்ளூர் போலீசார், உளவுத்துறை போலீசாருக்கு தெரியும். வியாபாரிகள், போலீசாருக்கு மாமூல் கொடுப்பதால் காட்டிக் கொடுப்பதில்லை. இதனால் தான் இதுபோன்ற விபரீதங்கள் நடந்துள்ளன; அவை தடுக்கப்பட வேண்டும்.
டவுட் தனபாலு: முதல்வரிடமும், டி.ஜி.பி.,யிடமும் இந்த இடத்துல தான் சாராயம் விற்கிறோம்னு யாரும் தகவல் சொல்ல மாட்டாங்க... தி.மு.க., வினர் கூட, இந்த அளவுக்கு முதல்வருக்கு வக்காலத்து வாங்கலையே... கூட்டணி கட்சி என்பதற்காக, இப்படி முரட்டுத்தனமா, 'முட்டு' கொடுக்கணுமா என்ற, 'டவுட்' தான் வருது!
த.மா.கா., தலைவர் வாசன்: சென்னை பெருங்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய தி.மு.க., பேச்சாளர் இனியன், பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார்; போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.க.,வின் அநாகரிகமான அரசியல் தொடர்கிறது. பேச்சாளர்களுக்கு நல்லது பேச சொல்லி கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை; தீயவற்றை, கெட்டதை பேசக்கூடாது என்பதை கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.
டவுட் தனபாலு: இதுபோன்று அநாகரிகமா பேசி பேசி தானே, தமிழகத்தில் திராவிட கட்சிகள் வளர்ந்திருக்குது என்பதில், 'டவுட்'டே இல்லை... இனியனுக்கு எதிர்காலத்துல அமைச்சர் பதவி கிடைத்தாலும், ஆச்சரியப்பட முடியாது!