PUBLISHED ON : ஜூன் 06, 2024 12:00 AM

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: அகில இந்திய அளவில், 'இண்டியா' கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. விழுப்புரம், சிதம்பரம் இரு தொகுதிகளிலும் வி.சி., கட்சியை மக்கள் வெற்றி பெற செய்து, அங்கீகாரம் வழங்கி உள்ளனர். மாநில கட்சி என்ற ஒரு அந்தஸ்தை பெற ஒரு வாய்ப்பை உருவாக்கி உள்ளனர்.
டவுட் தனபாலு: நல்லது... மாநில கட்சி என்ற அந்தஸ்துடன் அடுத்து வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,விடம் அதிக தொகுதிகளை கேட்டு நெருக்கடி தருவீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
பத்திரிகை செய்தி: முன்னாள் முதல்வர் பழனிசாமி, அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பை ஏற்ற பின் நடந்த தேர்தல்களில் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது, அக்கட்சி நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அக்கட்சியின் எதிர்காலம் என்னாகும் என்ற கேள்வியும் அவர்கள் இடையே எழுந்துள்ளது.
டவுட் தனபாலு: யானை மாலை போட்ட கதையாக, பதவிக்கு வந்தவர், தன்னையும் எம்.ஜி.ஆர்., - ஜெ., - கருணாநிதி போன்ற தலைவர்கள் மாதிரி நினைச்சுக்கிட்டாரு... பற்றாக்குறைக்கு கூட்டாளிகளைகழற்றி விட்டதும், அ.தி.மு.க., தோல்விக்கு அடியுரம் போட்டு விட்டது என்பதில், 'டவுட்'டே இல்லை!
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: தமிழகத்தில், மூன்று ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. 2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் அதிக கட்சிகளை கொண்ட நல்ல கூட்டணி அமையும். அரசியல் காழ்ப்புணர்வோடு தி.மு.க.,வும்அதன் கூட்டணி கட்சிகளும் செயல்படுகின்றன. மக்கள் உண்மை நிலையை அறிந்து தான் ஓட்டளித்துள்ளனர். மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கவோ, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவோ தமிழக அரசு தவறிவிட்டது. மாறாக, மக்கள் மீது தேவையற்ற சுமையை தான் ஏற்றி வைத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் உறுதியாக உருவாகும்.
டவுட் தனபாலு: கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டலை என்ற கதையாக பேசுறீங்களே... தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடந்துச்சு என்றால், 40க்கு 40 தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணிக்கு மக்கள் ஏன் ஓட்டு போட்டாங்க என்ற, 'டவுட்' தங்களுக்கு வரலையா?