PUBLISHED ON : ஜூன் 04, 2024 12:00 AM

தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால்: போலீசாரிடம் குறைகளை கேட்ட போது, பணிச்சூழல் காரணமாக, மன அழுத்தம், குடும்ப பிரச்னை, குடி போதைக்கு அடிமையாதல், தற்கொலை எண்ணம், கோபப்படுதல் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களில் மீள முடியாமல் தவிப்பது தெரியவந்தது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், 'கவுன்சிலிங்' தரவும், முதல் கட்டமாக, 'மகிழ்ச்சி' என்ற திட்டத்திற்கான ஆலோசனை மையம் சென்னையிலும், மதுரையிலும் துவங்கப்பட்டுள்ளது. விரைவில் மேற்கு மண்டல போலீசாருக்கு, கோவையில் மகிழ்ச்சி மையம் திறக்கப்படும்.
டவுட் தனபாலு: நல்ல விஷயம் தான்... சட்டம் - ஒழுங்கை பேணி பாதுகாக்கிற போலீசார் மகிழ்ச்சியா இருந்தால் தான், பொதுமக்கள் நிம்மதியா நடமாட முடியும்... அதனால, இந்த மகிழ்ச்சி மையங்களை மாவட்டத்துக்கு ஒன்றாக திறந்தால் கூட நல்லது தான்... இதன் வாயிலாக, போலீசாரின் பணித்திறன் மேம்படும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங்: ஏற்கனவே இதுபோல் வெளியான கருத்து கணிப்புகள் பலவும், தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. டில்லியில் அனைத்து தொகுதிகளிலும், 'இண்டியா' கூட்டணி வெற்றி பெறும்.
டவுட் தனபாலு: தேர்தலுக்கு பிந்தைய எல்லா கருத்து கணிப்புகளிலும், பா.ஜ.,வே மீண்டும் ஜெயித்து, மத்தியில்ஆட்சி அமைக்கும் என சொல்லிட்டதால இப்படி பேசுறீங்க... இதே, 'இண்டியா' கூட்டணி தான் ஆட்சியை பிடிக்கும்னு வந்திருந்தாலும், இதே பதிலை சொல்லியிருப்பீங்களா என்ற, 'டவுட்' வருதே!
பா.ஜ., தமிழக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி: பிரதமர் மோடி தலைமையில், மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்போம். உலக அரங்கில் நம் நாடு தொடர்ந்து முன்னேறி வருகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரிய வல்லரசாக நம் நாடு விரைவாக மாறும். பிரதமர் மோடி தலைமையிலான அரசால் மட்டுமே, அதை நிறைவேற்ற முடியும்.
டவுட் தனபாலு: ஊழல் இல்லாத ஒரு நிர்வாகத்தால் தான், நாடு முன்னேற முடியும்... அந்த வகையில், 10 ஆண்டுகளாக ஊழலற்ற துாய்மையான அரசை அளித்துள்ள மோடியின் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியில், இந்தியா வல்லரசாக மாறும் என்பதில், 'டவுட்'டே இல்லை!