/தினம் தினம்/செய்தி எதிரொலி/ ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் ஊரப்பாக்கத்தில் பூங்கா நிலம் மீட்பு ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் ஊரப்பாக்கத்தில் பூங்கா நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் ஊரப்பாக்கத்தில் பூங்கா நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் ஊரப்பாக்கத்தில் பூங்கா நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம் ஊரப்பாக்கத்தில் பூங்கா நிலம் மீட்பு
PUBLISHED ON : செப் 10, 2025 12:00 AM

ஊரப்பாக்கம்:ஊரப்பாக்கத்தில், பூங்காவிற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலம், தனி நபரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதில் வீடு கட்டப்பட்டிருந்தது. நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, ஆக்கிரமிப்பு வீட்டை வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு, 11வது வார்டு, பிரியா நகரில், கடந்த 1989ல், பிரியா நகர் 2, மனைப்பிரிவு உருவாக்கப்பட்டது.
இதில், சிறுவர் விளையாட்டுத் திடல் மற்றும் பூங்கா அமைக்க, சர்வே எண் 76/4 சி1, சி2, சி3 கீழ், 14,958 ச.அடி நிலம் ஒதுக்கப்பட்டது.
இப்பகுதி வளர்ச்சி அடைய துவங்கும்போது, பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட அந்த நிலம், போலி ஆவணங்கள் வாயிலாக, சிலருக்கு விற்கப்பட்டது.
பின், அதிகாரிகள் துணையுடன் அவர்களுக்கு பட்டாவும் வழங்கப்பட்ட நிலையில், நிலத்தை வாங்கிய நபர்களில் ஒருவர் 2,400 ச.அடியில், வீடு கட்டி குடியேறினார்.
நாளடைவில், அது பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலம் என்பது பகுதிவாசிகளுக்கு தெரியவர, செங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
கலெக்டர் ஆய்வு செய்ததில், அது பூங்காவிற்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது உறுதி செய்யப்பட, அந்த நிலத்திற்கு வழங்கப்பட்ட 'பட்டா' அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், அந்நிலத்தில் வீடு கட்டி குடியேறிய நபர், இடத்தை காலி செய்ய மறுத்தார். இதனால், நிலத்தை மீட்கவும், கட்டடத்தை அப்புறப்படுத்தவும் பகுதிவாசிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதன்படி, கடந்த பிப். 25ல், ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், அரசியல் பின்புலத்தால், கட்டடத்தை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டது.
இது குறித்து நம் நாளிதழிலில் கடந்த ஜூன் மாதம் செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில், செங்கை கலெக்டர் சினேகா உத்தரவையடுத்து வண்டலுார் தாசில்தார் பூங்கொடி தலைமையில், போலீசார் உதவியுடன், அந்த கட்டடம் பொக்லைன் இயந்திரம் வாயிலாக நேற்று காலை இடித்து அகற்றப்பட்டது.
மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 1.50 கோடி ரூபாய் என, வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.